சூரியனார் கோயில் ஆதீனகர்த்தருக்கு இன்று 100 வயது! | Adhinam Sunriyanar temple adhinam is today 100 years old

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (22/01/2019)

கடைசி தொடர்பு:11:47 (22/01/2019)

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தருக்கு இன்று 100 வயது!

Adhinam

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகளுக்கு இன்று 100 வயது பூர்த்தியாகிறது. எனவே, சூரியனார்கோயில் ஆதீன மடத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் அனைத்து ஆதீனகர்த்தர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 20-வது சந்நிதானமாக,  ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாட்சி செய்துவருகிறார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம்கொண்டு, திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகள் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித்தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சிறப்பாக சேவைபுரிந்தார்.

அதன்பின், திருவாவடுதுறை சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கே, ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி 20-வது  பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி, ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்துவருகிறார். சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம்கொண்டு  சேவை செய்துவரும் ஆதினகர்த்தருக்கு இன்று வயது 100.

இதையொட்டி, ஆதீன மடத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடு பூஜைகளில் மற்ற ஆதீனகர்த்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். அத்துடன், 100  வயது கண்ட ஆதீனகர்த்தரை கொலுவில் அமரவைத்து, மலர்க் கிரீடம் சூட்டி அனைவரும் நமஸ்கரிக்கிறார்கள். ஆதீனகர்த்தரிடம்   ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் மடத்தில் குவிந்திருக்கிறார்கள்.