`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம் | Tamilisai Soundararajan Expalin about Ajith's statement

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (22/01/2019)

கடைசி தொடர்பு:12:15 (22/01/2019)

`நாங்கள் அவரை அழைக்கவேயில்லை’ - அஜித் அறிக்கைக்கு தமிழிசை விளக்கம்

சில தினங்களுக்கு முன்பு, திருப்பூரில் மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க-வில் இணையும் விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்தனர். 

தமிழிசை

அப்போது பேசிய தமிழிசை,  “திரைப்படக் கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான், பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும்” என்று கட்சியில் இணைந்த அஜித் ரசிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார்.   

இதுதொடர்பாக நடிகர் அஜித்குமார்  நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட எந்த ஆர்வமும் இல்லை. தேர்தலின்போது வாக்களிப்பது மட்டுமே அரசியலில் என் உச்சக்கட்ட தொடர்பு’ என்று  அரசியல் மீதான தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அஜித்

அஜித் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தற்போது தமிழக அளவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த அறிக்கைக்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், சில அரசியல் தலைவர்களும் இவரின் அறிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ பிரமாதமான அறிக்கை... மிகவும் நல்ல அறிக்கை, பாராட்டுக்குரிய அறிக்கை. அஜித் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளார். ஆனால், அவர் நேற்று ஏன் அந்த அறிக்கையை வெளியிட்டார் என்பதில் பலரும் பல கருத்துகள் கூறிவருகின்றனர். ஏதோ பா.ஜ.க அவரை அழைத்தது போலவும், அதற்கு அஜித் பதில் அளித்தது போலவும் சில விளக்கங்கள் முன் வைக்கப்பட்டன. 

தமிழிசை

ஆனால், அது எதுவும் உண்மை இல்லை. அவரின் அறிக்கை மிகப் பிரமாதமாக உள்ளது. அதை நான் வரவேற்கிறேன். மற்ற நடிகர்கள், அரசியலுக்கு வருவேன்... வரமாட்டேன் எனக் கூறி வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் தன் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அஜித் வெளியிட்டுள்ளார். நாங்கள் யாரும் அவரை பா.ஜ.க-வில் இணையுமாறு அழைக்கவில்லை. அவர் படத்தில் நடிக்க விரும்பினால் நடிக்கட்டும். நான் மருத்துவராக இருந்தபோது, ஒரு குழந்தையின் அறுவைசிகிச்சைக்கு அஜித் உதவினார். அதைத்தான் நான் பாராட்டினேன். இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறு இல்லை”  என்று தெரிவித்துள்ளார்.