``போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் பள்ளிப் பேருந்துகளை இணைக்கணும்”- கிரண் பேடி உத்தரவு | "School buses should be linked under police control room" Kiranbedi order

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:13:30 (22/01/2019)

``போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் பள்ளிப் பேருந்துகளை இணைக்கணும்”- கிரண் பேடி உத்தரவு

``பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் போக்குவரத்துக் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட வேண்டும்” என்று ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசுத் துறைகளில் அவ்வப்போது ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி நேற்று கல்வித்துறை அலுவலகத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்த அத்தனை பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அதனடிப்படையில் துறையின் இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் இணை இயக்குநர் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஊழியர்களின் பணி, கோப்புகளின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தார்.

கல்வித்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தும் கிரண்பேடி

அலுவலகத்துக்கு வரும் மனுக்கள், கடிதப் போக்குவரத்துகள் மற்றும் துறைக்கு அவசியமான விவரங்கள் அனைத்தையும் கணினி மூலம் பாதுகாப்பதோடு தொடர் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ரகசிய ஆவணங்களைக் கணினியில் பதிவு செய்து பாதுகாக்க உத்தரவிட்டார்.

பள்ளிப் பேருந்துகள் குறித்து விளக்கம் கேட்கும் கிரண்பேடி

பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஆய்வு விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தரத்தை உடனடியாக ஆய்வு செய்ய முடியுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பட்டியலிடவும், ஆசிரியர்களின் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளைக் கல்வித்துறை மேற்கொண்டு செயல்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

ஆளுநர் ஆய்வு

அதேபோல பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகள் அனைத்தும் வயர்லெஸ் மூலம் போக்குவரத்து மற்றும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க