வாட்ஸ்அப் ஆடியோ புகழ் போலீஸ் உதவி கமிஷனர் வீட்டுக்குள் நுழைந்த விஜிலென்ஸ்! | Vigilance raids at ACP Muthalagu

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (22/01/2019)

கடைசி தொடர்பு:13:44 (22/01/2019)

வாட்ஸ்அப் ஆடியோ புகழ் போலீஸ் உதவி கமிஷனர் வீட்டுக்குள் நுழைந்த விஜிலென்ஸ்!

போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு வீடு

சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் உதவி கமிஷனராகப் பணியாற்றிய முத்தழகு வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். 

சென்னை தேனாம்பேட்டையில் உதவி கமிஷனராகப் பணியாற்றியவர் முத்தழகு. இந்தச் சமயத்தில் ஒரு வழக்கு தொடர்பாக உதவி கமிஷனர் முத்தழகும், வாலிபர் ஒருவரும் போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்அப்பில் வலம் வந்தது. இதனால், உதவி கமிஷனர் முத்தழகு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஆவடியில் பணியாற்றுகிறார். 

இந்தநிலையில் அந்த வாட்ஸ் அப் ஆடியோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இடம் பெற்ற குரல் உதவி கமிஷனர் முத்தழகு என்பது உறுதியானதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார், முத்தழகு மீது வழக்குப்பதிவு செய்தனர். 

போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு வீடு

வழக்கு விசாரணை நடந்துவரும்போது இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் பி 1 பிளாக்கில் இருக்கும் உதவி கமிஷனர் முத்தழகு வீட்டுக்குச் சென்றது. காலை நேரம் என்பதால் அவரின் வீட்டின் முன் தாமரை பூ கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்தத் தகவல் கிடைத்ததும் மீடியாக்கள், பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் அங்கு சென்றனர். முத்தழகு குடியிருக்கும் குடியிருப்பில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் வீட்டுக்குள் சோதனை நடத்திய விஜிலென்ஸ் போலீஸார் முற்பகலில் யாருக்கும் தெரியாமல் பின்பக்கம் வழியாக வெளியில் சென்றுவிட்டனர். சுமார் 4 மணி நேரம் இந்தச் சோதனை நடந்துள்ளது. முத்தழகு வீட்டிலிருந்து வழக்குத் தேவையான ஆவணங்களை விஜிலென்ஸ் போலீஸார் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதை விஜிலென்ஸ் போலீஸார் உறுதி செய்யவில்லை. 

வாட்ஸ்அப் ஆடியோவில் நடந்த பேரம் தொடர்பாக இந்த விசாரணை நடந்துவருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``உதவி கமிஷனர் முத்தழகு தொடர்பான தகவல்களைச் சேகரித்துள்ளோம். அவரின் சர்வீஸ் ரெக்கார்டு அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. குறிப்பாக தேனாம்பேட்டையில் அவர் உதவி கமிஷனராகப் பணியாற்றியபோதுதான் ஒரு வழக்கு தொடர்பாக போனில் பேரம் நடந்துள்ளது. அதில் பேசியது முத்தழகு என்று தெரியவந்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்தோம்.

போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு

அடுத்தகட்டமாக அவருடன் பேசிய வாலிபரிடம் விசாரணை நடத்தவுள்ளோம். மேலும் உதவி கமிஷனர் முத்தழகுவிடமும் விளக்கம் கேட்கவுள்ளோம். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவரின் வீட்டில் கிடைக்குமா என்றுதான் இன்று நாங்கள் சோதனை நடத்தியுள்ளோம்" என்றார். 

உதவி கமிஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையால் காவலர் குடியிருப்பில் காலை முதல் பரபரப்பு நிலவிவருகிறது.