சாதுவான ஆசிரியரை மிரட்டிய ப்ளஸ் டூ மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு! | Vellore school takes action against 6 Students, who mock their teacher

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (22/01/2019)

கடைசி தொடர்பு:17:35 (22/01/2019)

சாதுவான ஆசிரியரை மிரட்டிய ப்ளஸ் டூ மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு!

திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சாதுவான ஆசிரியர் ஒருவரை, அசிங்கப்படுத்தும் விதமாக மிரட்டி வீடியோ எடுத்து வெளியிட்ட ப்ளஸ் டூ மாணவர்கள் ஆறு பேர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியரை மிரட்டிய ப்ளஸ் டூ மாணவர்கள் சஸ்பெண்டு

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அருகில் மிகப் பழைமையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 800-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள். வடமலை என்ற எக்னாமிக்ஸ் ஆசிரியர் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியரிடம், ப்ளஸ் டூ மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபடுவதைப்போல் சமீபத்தில் ஏகப்பட்ட டப்ஸ்மாஷ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. வீடியோவில், மாணவர்கள் சிலர், சீருடை அணியாமல் வகுப்பறைக்குள் சுற்றித்திரிகிறார்கள். இன்னும் சில மாணவர்கள் சட்டையை அவிழ்த்து தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்டு மேஜையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

டப்ஸ்மாஷ் வீடியோவில் பாடல்களை ஒலிபரப்பி, மாணவர்கள் ``ரவுடிகளைப்போல் பந்தா செய்துகொண்டு ஆசிரியர் வடமலையிடம் வம்பிழுக்கிறார்கள். இன்னும் நிறைய சேட்டைகளைச் செய்தபடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அந்த மாணவர்களே பதிவிட்டிருந்தனர். இதுசம்பந்தமாக, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குமுறலை விரிவான செய்தியாக முதலில், ‘விகடன்’ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கல்வி அதிகாரிகள், அந்தப் பள்ளிக்குச் சென்று ப்ளஸ் டூ மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

ஆசிரியரை மிரட்டிய ப்ளஸ் டூ மாணவர்கள்

இந்த நிலையில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதுடன் ஆசிரியரைத் துன்புறுத்திய ப்ளஸ் டூ மாணவர்கள் தினேஷ்குமார், முகிலவன், அரவிந்தன், வீரமணி, சத்தியபிரகாஷ், கிஷோர் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து, பள்ளிச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கடிதத்தை, பள்ளி விளம்பரப் பலகையில் ஒட்டியுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு பொதுத்தேர்வு எழுத அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி திருப்பத்தூர் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ராமகிருஷ்ணா பள்ளியில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது குறித்துத் தொடர்ந்து புகார்கள் வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

சஸ்பெண்ட்
 

கடந்த ஆண்டு இதே ராமகிருஷ்ணா பள்ளியில், வகுப்பறையைவிட்டு வெளியே சுற்றித்திரிந்த ப்ளஸ் ஒன் மாணவனைக் கண்டித்த தலைமை ஆசிரியரை, அந்த மாணவன் கத்தியால் குத்தினான். இதில் தலைமை ஆசிரியர் பலத்த காயமடைந்து உயிர் பிழைத்தார். இதுபோன்ற தொடர் வன்முறைச் சம்பவங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மீதே திணிப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.