அ.தி.மு.க-வை மீட்டெடுக்கப் போவது தினகரன்தான்!'- முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கணிப்பு | TTV Dinakaran will rescue the ADMK party, says Former minister Palaniappan

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (22/01/2019)

கடைசி தொடர்பு:17:05 (22/01/2019)

அ.தி.மு.க-வை மீட்டெடுக்கப் போவது தினகரன்தான்!'- முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கணிப்பு

``தற்போது தமிழகத்தில் நடப்பது உண்மையான அ.தி.மு.க ஆட்சி அல்ல. தற்போது நடப்பது போலி அ.தி.மு.க ஆட்சிதான்" என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிரடியாக பேசினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டம்

கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் கழக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் ஆர்.எம்.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் பி.எஸ்.எம்.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறப்பு பேச்சாளர்களாக அ.ம.மு.க தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், தலைமைக் கழக பேச்சாளர் தேனி ராமர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இக்கூட்டத்தில், அ.ம.மு.க அம்மா பேரவைச் செயலாளர் சாகுல் அமீது, கழக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை துணைத் தலைவர் சந்திரசேகர், கரூர் மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், பெரியண்ணன், சுல்தான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டத்தில் பழனியப்பன்

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசியபோது, ``எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.கவை வழிநடத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சசிகலாவும், அ.ம.மு.கவின் துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரனும்தான். தற்போது, ஆளும் தமிழக அரசு ஆட்சி துரோக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் மீது பல்வேறு குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்களை வைத்துக்கொண்டு எடப்பாடி அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் நடப்பது உண்மையான அ.தி.மு.க அரசு இல்லை. தமிழகத்தில் போலி அ.தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவை மீண்டும் மீட்டெடுக்க டி.டி.வி.தினகரனால் மட்டுமே முடியும்" என்றார்.