`யானைப்பசிக்கு சோளப்பொறியா?'- நிவாரண அறிவிப்பால் கொந்தளித்த மக்காச்சோள விவசாயிகள்! | Government should increase Compensation amount, urges Maize farmers

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (22/01/2019)

கடைசி தொடர்பு:17:20 (22/01/2019)

`யானைப்பசிக்கு சோளப்பொறியா?'- நிவாரண அறிவிப்பால் கொந்தளித்த மக்காச்சோள விவசாயிகள்!

``அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அறிவித்துள்ள நிவாரணம் என்பது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது. போதிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்பதை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளப் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். எனவே, மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து விருதுநகர் மாவட்டத் தலைவர் விஜயமுருகன் கூறும்போது, ``விருதுநகர் மாவட்டத்தில் 60,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் என்பதே இல்லை. இந்த நிலையில், தற்போது அரசு அறிவித்துள்ள இழப்பீடு என்பது யானைப்பசிக்குச் சோளப்பொறி போன்றது. நாங்கள் மீண்டும் அடுத்தமுறை விவசாயம் செய்வதற்கான வழியாகத்தான் இழப்பீடு கோருகிறோம். அரசு அறிவித்துள்ள நிவாரணத்தால் பாதி இழப்பீட்டைக்கூட ஈடுசெய்ய முடியாது.

மக்காசோள விவசாயிகள் போராட்டம்

அமெரிக்க கம்பெனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதையில் புழுத்தாக்குதல் இருந்துள்ளது. இதை இங்கே உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களும் பரிசோதனை செய்யவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கர்நாடக மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்பு உள்ளது. எனவே, விதை நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது'' என தெரிவித்தார்.