``லண்டனில் ரிச்சர்ட் பீலேவை சந்தித்தேன்!’’ - விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை ஒப்புதல் | Thambi Durai appears in arumugasamy enquiry commission

வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (22/01/2019)

கடைசி தொடர்பு:16:33 (22/01/2019)

``லண்டனில் ரிச்சர்ட் பீலேவை சந்தித்தேன்!’’ - விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை ஒப்புதல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டினர். அதனால் அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு. கடந்த வருடம் முதல் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள்  இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகசாமி

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, அவரது வீட்டில் வேலை செய்தவர்கள், உதவியாளர்கள் மற்றும் அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் எனப் பலருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று அவர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி தனது தரப்பு கருத்துகளை முன் வைத்தார். 

தம்பிதுரை

 `அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அது மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அப்போலோ தரப்பில் ஏதும் சொல்லப்படவில்லை. அதே நேரம் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவர்கள் எதுவும் சொல்லவில்லை. எனவே, நாங்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்’ என விஜயபாஸ்கர் ஆணையத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

தம்பிதுரை

இந்நிலையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை ஆஜராகி விளக்கமளித்தார். மூன்று மணி நேர விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆணையத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததாகவும், அதனை வெளியில் கூற முடியாது எனவும் தெரிவித்து சென்றார்.  

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன்  கூறுகையில், “ அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மிகவும் திருப்திகரமான இருந்ததாக  தம்பிதுரை தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதில் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இருந்ததாகவும் அப்போது அவர் எந்த சந்தேகமும் கேட்கவில்லை எனவும் கூறினார். 2017-ம் ஆண்டு பொதுகுழு கூடும் வரை சசிகலாவுக்கு, தான் ஆதரவாக இருந்ததாக கூறினார்.  ஜெயலலிதாவை சிகிச்சைகாக வெளிநாடு அழைத்து செல்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடிய விவகாரம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார். லண்டனில் மருத்துவர் ரிச்சட் பீலேவை, நீங்கள் சந்தீர்களா என்ற கேள்விக்கு தம்பிதுரை ஆம்! என கூறினார். மேலும் விசாரணை ஆணையம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்ற தொணியில் பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்” என ஆணையத்தில் தம்பிதுரை வலியுறுத்தியிருப்பதாகவும் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.