`கண்மாயில் விஷம் கலந்தது யார்?’ கண்டுபிடிக்கத் தயங்கும் தேனி மாவட்ட நிர்வாகம்! | Theni District Administration is not interested in finding the culprit who mixed poison

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (22/01/2019)

கடைசி தொடர்பு:17:46 (22/01/2019)

`கண்மாயில் விஷம் கலந்தது யார்?’ கண்டுபிடிக்கத் தயங்கும் தேனி மாவட்ட நிர்வாகம்!

"கட்டடங்களுக்கு நடுவே மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கண்மாயில் விஷம் கலக்கப்பட்டிருப்பதை ஒரு விஷயமாகவே பார்க்காமல் அலட்சியமாக இருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது!"

`கண்மாயில் விஷம் கலந்தது யார்?’ கண்டுபிடிக்கத் தயங்கும் தேனி மாவட்ட நிர்வாகம்!

மீறு சமுத்திர கண்மாயில் (தேனி மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கும்), சமூக விரோதிகள் சிலரால் கலந்துவிடப்பட்ட விஷத்தால் மீன்கள் செத்துமிதக்கின்றன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மீறு சமுத்திர கண்மாய், நகரின் மிக முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. சமுத்திரம்போலக் காட்சியளிக்கும் இந்தக் கண்மாயில் சமூக விரோதிகள் சிலர், விஷம் கலந்ததால் மீன்கள் செத்துமிதக்கின்றன. இதைக் கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் மாவட்டக் கலெக்டர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கண்மாயில் செத்து மிதந்த மீன்களை மாலையாகச் செய்துகொண்டு வந்தனர்.

இந்து எழுச்சி முன்னணி, தேனி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ், “இந்த மாவட்ட நகரின் நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக இருக்கும் மீறு சமுத்திர கண்மாயில், `மீன் வளர்க்கிறோம்’ என்ற பெயரில் கடந்த காலங்களில் கழிவுகளைக் கொட்டி நீரை மாசுபடுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டுவந்தனர். மேலும், மீன்கள் பிடிப்பதற்காகக் கண்மாய் நீரைச் சட்டவிரோதமாக வெளியேற்றவும் செய்தனர். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இது ஒருபுறம் என்றால், கடல்போல இருக்கும் மீறு சமுத்திர கண்மாயை மேம்படுத்தி படகுவிட்டு அழகான சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு. அதைக் கருத்தில்கொண்டு, கடந்த காலங்களில் தேனியில் பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முயற்சி எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த வருடம் தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர், மீறு சமுத்திர கண்மாயில் படகுவிட்டு சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 4.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இதனால் இம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இன்றுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இதற்கிடையில் இன்று கண்மாயில் விஷம் கலந்திருக்கிறார்கள். இதனால், கண்மாயைச் சுற்றியுள்ள விவசாயிகள், தங்களது கால்நடைகளைக் கண்மாயில் நீர் குடிக்க வைக்க அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் பலனில்லை. இனி கண்மாயில் மீன்கள் வளர்க்க அனுமதிக்காமல், சுற்றுலாத்தலமாக மாற்றினால் மட்டுமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்றார்.

இந்து எழுச்சி முன்னணி, தேனி

இதுதொடர்பாக மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் இந்து சாராவிடம் பேசினோம். “மீறு சமுத்திர கண்மாயில் மீன்கள் செத்து மிதக்கும் தகவல் இப்போதுதான் எனக்குத் தெரியும். கண்மாயில் தற்போது மீன்கள் வளர்க்க யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. முன்னர், மீன் வளர்த்தவர்களுக்குக் கடந்த 2017-ம் ஆண்டோடு அனுமதி முடிந்துவிட்டது. அதை, 2019 வரை புதுப்பிக்கக் கேட்டார்கள். நாங்கள் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் நீதிமன்றம் சென்றார்கள். நாங்கள் அப்பீல் சென்றிருக்கிறோம். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது” என்றார்.

``நகரின் மிக முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் மீறு சமுத்திர கண்மாயில், விஷம் கலந்துள்ளது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா’’ என மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் கேட்டபோது, “எங்களுக்கு எந்தப் புகாரும் கிடைக்கப்பெறவில்லை. புகார் கொடுத்தால்தான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று பதிலளித்தனர்.

``தேனி நகரின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு கண்மாயில், நகராட்சி அலுவலகம் மற்றும் உழவர் சந்தை ஆகியவை அருகில் இருக்கும் ஒரு கண்மாயில், கட்டடங்களுக்கு நடுவே மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கண்மாயில் விஷம் கலக்கப்பட்டிருப்பதை ஒரு விஷயமாகவே பார்க்காமல் அலட்சியமாக இருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது” என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

என்ன செய்யப்போகிறது மாவட்ட நிர்வாகம்?


டிரெண்டிங் @ விகடன்