`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை! | Madras HC warns over Milk contamination

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (22/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (22/01/2019)

`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை!

``பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை,  நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்காது'' என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சி.பி.ஐ விசாரனைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலப்பட பால் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான பாலில், கலப்படம் செய்வது என்பது ஆரோக்கிரத்துக்கு விடுக்கப்படும் மிரட்டல் என்பதால், அதை நீதிமன்றம் கண்மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பால் கலப்படம்

பின்னர், தமிழகம் முழுவதும் பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை. அந்த வழக்குகளில்  வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள், தண்டனை பெற்றவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக வரும் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த விவரங்களைத் தருவதில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும், பால் கலப்படம் தொடர்பாக 6 முதல் 10 மாதம் வரை நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்கும்படி கீழமை நீதிமன்றங்களை அறிவுறுத்த உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தரமான பால், மக்களுக்கு கிடைக்கும் வகையில் பாலின் தரம், அதைப் பரிசோதிக்கும் ஆய்வகம், விற்பனை மையங்கள், உணவுப்பாதுகாப்புத் துறையின்  நடவடிக்கைகள் என அனைத்தையும் நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், அரசின் நடவடிக்கைகளில் திருப்தியடையாவிட்டால் சுகாதாரத் துறைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து வழக்கை பிப்ரவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.