`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை!’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க | DMK to stage protest over Kodanad issue

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (22/01/2019)

கடைசி தொடர்பு:21:10 (22/01/2019)

`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை!’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியைவிட்டு நீக்க வலிறுத்தி தமிழக ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சி அறிவித்திருக்கிறது.

ஸ்டாலின்

இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளச் செய்திக் குறிப்பில், ``கொட நாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் கொலை முயற்சிக்குள் சிக்கி அவர் தப்பியுள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவங்களில் நேரடித் தொடர்புடைய சயனும் மனோஜும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சொல்லித்தான் செய்தோம் என்று பகிரங்கமாகக் கூயுள்ளனர். அது மட்டுமன்றி எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதைச் செய்ததாக, சயன், மானோஜ் ஆகியோரிடம் கனகராஜ் சொன்னதாக அவர்களே கூறியுள்ளனர்.

அண்ணா அறிவாலயம்

இந்தக் கொலை, கொள்ளை, விபத்துகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் கண்கூசும் அளவுக்கு தொலைக்காட்சிகளில் போய்க்கொண்டிருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக எந்தப் பதிலும் கூறாமல் எதையோ சுற்றிவளைத்துக் கூறிக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் கடந்த 14-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து கொடநாடு நிகழ்வுகள் குறித்து சாமுவேல் மேத்யூ வெளியிட்ட ஆதாரத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணை நேர்மையாக நடைபெற, பதவியிலிருந்து விலகிட வேண்டுமெனவும் அறிவுறுத்த வேண்டும் எனவும் நேர்மையான ஐ.ஜி தலைமையிலான புலனாய்வு குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் மனு அளித்திருந்தோம். ஆனால், இதுவரை அந்த மனு மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம்  நடைபெறும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.