`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே?’- அதிர்ச்சியில் எ.வ.வேலு | People gives grand welcome to Thiruvannamalai DMK MLA velu

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (22/01/2019)

`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே?’- அதிர்ச்சியில் எ.வ.வேலு

அ.தி.மு.க அரசின் மக்கள் விரோத ஆட்சி என்று கூறி அந்த ஆட்சியைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க, அப்போது நமக்கு நாமே பயணத்தின் போதும் சரி. இப்போது நடத்திய ஊராட்சி சபை கூட்டத்திலும் சரி. காலுக்கு அடியில் மலர் தூவி ஸ்டாலினுக்கு கூட வரவேற்பு கொடுக்கவில்லை யாரும். ஆனால், எ.வ.வேலு நடத்திய ஊராட்சி சபை கூட்டத்தில் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தி.மு.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எ.வ. வேலு

`முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது தமிழகத்தின் அவல நிலைக்கு' என்ற தாரக மந்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு கிராமங்களை நோக்கிப் படையெடுத்து ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறது தி.மு.க. இந்த ஊராட்சி சபைக் கூட்டம், மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கும் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் அசைமென்ட் கொடுத்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 

அதன் அடிப்படையில், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ வேலு தலைமையில், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 21-ம் தேதி அன்று சே.கூடலூர், கிழ்சிறுப்பாக்கம், ராதாபுரம், சேர்ப்பாபட்டு, வாணாபுரம், பெருந்துறைப்பட்டு உள்ளிட்ட 8 கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது. இதில் எ.வ வேலு கலந்துகொண்டு அ.தி.மு.க ஆட்சி அவலநிலையைப் பற்றி மக்களிடம் பேசி மக்களின் குறைகளைக் கேட்டார்.

எ.வ.வேலு

எ.வ வேலுவின் சொந்த ஊரான சே.கூடலூரில் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் சென்றபோது, அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கியதும் 20 பெண்கள் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுத்தனர். கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்லும் தூரம் வரை இரண்டுப் பக்கமும் பெண்கள் நின்றுகொண்டு வேலுவின் காலுக்கு அடியில் மலர்களை தூவிக்கொண்டு சென்று வரவேற்பு அளித்தனர். மலர்கள் மீது நடந்துகொண்டே சென்று கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். இது ஒரு பக்கம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இன்னொரு பக்கம் ஒரு விதமான பதற்றமும் அவரிடம் தொற்றிக்கொண்டது. காரணம் ஊராட்சி சபை கூட்டம் எளிய முறையில் நடக்க வேண்டும் என்ற தலைமையின் உத்தரவு.

எ.வ.வேலு

இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்,``தலைவர் ஸ்டாலின், ஊராட்சி சபைக் கூட்டம் சிம்பிளாக இருக்க வேண்டும், கட்சி பேனர் ஒன்று மட்டுமே இருந்தால் போதும், கூட்டம் எதற்காக நடத்துகிறோம் என்று மக்கள் தெரிந்துகொள்ள போஸ்டர் மட்டும் அடித்து ஒட்டினால் போதும் மற்றும் எம்.எல்.ஏ வுக்கு,  மா.செ.வுக்கு மட்டுமே கூட்டம் நடக்கும் ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் மட்டும் சால்வை போட வேண்டும் மற்றவர்கள் யாரும் போடக்கூடாது என்று சில கண்டிஷன்கள் போட்டார். முக்கியமாக, பிரமாண்டம் இருக்கவே கூடாது என்றார். ஆனால், சே.கூடலூர் வேலுவின் சொந்த ஊர் என்பதால் அங்கு பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள். இது அவருக்கு நெருக்கமான முக்கியப் பிரமுகர் ஒருவர் `அய்யா சொந்த ஊருக்கு வராரு பிரமாண்டமா இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டார். அதான் ரொம்பவே பிரமாண்டம் செய்துவிட்டனர். இப்போது இது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி விட்டது. இதனால் ஸ்டாலின் கோபப்படுவாரா என்று எ.வ வேலு கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்’’ என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க