மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் - 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Parent found their son after 3 years

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:07:24 (23/01/2019)

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் - 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் - 3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய வாலிபரை 3 ஆண்டுகளுக்குப் பின் அவரது பெற்றோர்கள் சந்தித்து கண்ணீர் மல்க அழைத்துச் சென்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் 3 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை சந்தித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அருணகிரி சத்திரம் மாதவராயர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி  சரவணன். இவரின் மனைவி குமாரி. வறுமை நிலையில் வசித்து வரும் இவர்களின் ஒரே மகன் சிவக்குமார். சிவகுமாருக்கு  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது ஒரே வாரிசான மகன் சிவகுமாருக்கு மனநலம் பாதிப்படைந்ததை அறிந்த சரவணன் தம்பதி வறுமையான நிலையிலும் தங்கள் மகனை சிகிச்சை அளித்துப் பராமரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2016 -ம் ஆண்டு சிவகுமார் திடீரென காணாமல் போனார். வயது முதிர்ந்த பெற்றோர் காணாமல் போன சிவகுமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தங்கள் தேடுதல் முயற்சியைக் கைவிட்டனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் மனோலயா மனநலக் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ராமேஸ்வரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த வாலிபர் சிவகுமாரை மீட்டனர். தங்களது காப்பகத்தில் சிவகுமாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் உடல், மனவளப் பயிற்சியை அளித்து வந்தனர். சுமார் 15 மாதங்கள் அளிக்கப்பட்ட இந்தச் சிகிச்சையின் பலனாக சிவகுமார் குணமடைந்தார். ஒரு கட்டத்தில் தான் மனநோயாளி அல்ல என்றும் தனது பெற்றோர் மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரங்களை அங்கு காப்பக நிர்வாகிகளிடம் கூறியபடி இருந்துள்ளார்.

காப்பக நிர்வாகிகள் சிவகுமார் கொடுத்த முகவரி தொடர்பாக மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பக ஆய்வாளர் தாஹீராவிடம் தெரிவித்துள்ளனர். அவர் தங்களிடம் இருந்த காணாமல் போனவர்கள் பற்றிய புகார் பட்டியலை ஆய்வு செய்தபோது சிவகுமார் கூறிய முகவரி சரியாக இருந்துள்ளது. இதையடுத்து ஆரணியில் உள்ள சிவகுமாரின் பெற்றோரைத் தொடர்புகொண்டு ராமேஸ்வரத்தில் சிவகுமார் தங்கியிருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சரவணனும் அவரின் மனைவியும் 3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தங்கள் மகனைத் தேடி ராமேஸ்வரம் வந்தனர். அங்கு மனோலயா மனநலக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மகன் சிவகுமாரைக் கண்டதும், பெற்றோர் இருவரும் கட்டியணைத்து கண்ணீர் சிந்தியுள்ளனர். இதைக் கண்ட அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, மாவட்ட மருத்துவ நல அலுவலர் டாக்டர் பெரியார் லெனின் முன்னிலையில் மனநலம் தேறிய வாலிபர் சிவகுமாரை அவரது பெற்றோர்களுடன் காப்பக நிர்வாகி சுனில் அனுப்பி வைத்தார்.