புதுக்கோட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - தாய், குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி! | Pudukkottai fire Accident 3 death

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (23/01/2019)

கடைசி தொடர்பு:10:50 (23/01/2019)

புதுக்கோட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - தாய், குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி!

புதுக்கோட்டை அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனிவேலு. கூலித்தொழிலாளியான இவருக்கு பொன்னுமணி (28) என்ற மனைவியும், சஞ்சீவி (3), சங்கவி (2) இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 17-ம் தேதி வீட்டில் பொன்னுமணி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் இரண்டு குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக சமையல் கேஸ் சிலிண்டர் கசிவானதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.

இதில் வீட்டிலிருந்த பொருள்களும் சேதமடைந்தன. தீக்காயமடைந்த மூவரையும் மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு மூவருக்கும் கடந்த சில தினங்களாக சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனிக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக மூவரும் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகன், மகள் என 3 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.