வடமாநில சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை - மதுரையைச் சேர்ந்த இருவருக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம் | Tirupur sexual harassment Issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (23/01/2019)

கடைசி தொடர்பு:11:35 (23/01/2019)

வடமாநில சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை - மதுரையைச் சேர்ந்த இருவருக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 நபர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சிறைத்தண்டனை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 40 வயதான இவர் திருப்பூர் மாவட்டம் அமராவதிபாளையம் பகுதியில் உள்ள ஓர் அட்டை கம்பெனியில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். மேலும், அதே நிறுவனத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில குடும்பங்களும் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அதில் ஒரு தம்பதியின் 12 வயது மகள் அருகில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற அந்த வடமாநில சிறுமியை, பாலகிருஷ்ணன் உடுமலைப்பேட்டைக்குக் கடத்திச் சென்று, அங்கிருந்த தனது உறவினரான சின்னமாரிமுத்து என்பவரது வீட்டில் வைத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காங்கயம் மகளிர் காவல்நிலைய அதிகாரிகள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் மற்றும் சின்னமாரிமுத்து ஆகியோர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். அந்த வழக்கானது திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில், ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாலகிருஷ்ணனுக்கு முறையே 7 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 20,000 அபராதமும், அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக பாலகிருஷ்ணனின் உறவினர் சின்னமாரிமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் ரூபாய் 15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.