`தீயில் எரிந்து சாம்பலான 9 குடிசைகள்!’ - வேலூரில் விபரீதம் | Fire Accident in Vellore 9 Houses burned

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (23/01/2019)

கடைசி தொடர்பு:13:50 (23/01/2019)

`தீயில் எரிந்து சாம்பலான 9 குடிசைகள்!’ - வேலூரில் விபரீதம்

வேலூரில் தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து

வேலூர் சேண்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் தெருவில், சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 15 குடும்பத்தினர் தரைவரி கொடுத்துவிட்டு தென்னை ஓலை, தகரம் மற்றும் சிமென்ட் சீட்டுகளால் கூரை அமைத்து வசிக்கின்றனர். இன்று காலை, கட்டட மேஸ்திரி சரத் என்பவரின் வீட்டில் மண் அடுப்பைப் பற்ற வைத்துச் சமையல் செய்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுவரும் நேரத்தில், சரத்தின் குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றியது. மளமளவென எரிந்த தீ, அடுத்தடுத்துள்ள மேலும் 8 குடிசை வீடுகளுக்கும் வேகமாகப் பரவியது. அந்த நேரத்தில், மற்ற வீடுகளில் இருந்தவர்கள் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பெரும்பாலானோர் இல்லை.

வீடுகள்

இதனால், 9 குடிசை வீடுகளும் தீக்கிரையானது. தகவலறிந்ததும், வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையிலான வீரர்கள் மற்றும் வடக்கு போலீஸார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில், சரத், மாவீரன், வேலு, அமுலு, ஏழுமலை, கமலா, சிவா, பேபி, சாந்தி ஆகிய 9 பேரின் வீடுகளில் இருந்த ஆடைகள், மின்சாதனப் பொருள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு, வருவாய்த்துறையினர் உடனடி நிவாரணமாக 5 கிலோ அரிசி, வேட்டி-சேலை கொடுத்தனர்.

வேலூர்

குடிசை வீடுகளுக்கு அருகில் குப்பை எரிந்துகொண்டிருந்ததாகவும், அதிலிருந்து கூட எரிந்த காகிதங்கள், காற்றில் பறந்துவந்து குடிசை மீது விழுந்திருக்கலாம். அதனால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.