`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்  | Husband murdered his wife in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (23/01/2019)

கடைசி தொடர்பு:13:11 (23/01/2019)

`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர் 

சென்னை புளியந்தோப்பில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காத காரணத்தால் அவரைக் கொலை செய்த கணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

கொலை செய்யப்பட்ட தாராபாய்

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் துக்காராம் (42). பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் தாராபாய் (33). இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்தனர். இவர்களுக்கு சஞ்செய்ராம், அனுமந்ராம், ஸ்ரீராம் என மூன்று மகன்கள் உள்ளனர். தாராபாயின் அம்மா வீடு புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், மூன்றாவது தெருவில் உள்ளது. திருமண முடிந்தபிறகு இந்த வீட்டில்தான் குடும்பத்துடன் துக்காராம் குடியிருந்துவந்தார். 

தாராபாய்க்கும் துக்காராமுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. இந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்த சஞ்செய்ராம், அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அவரிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்தனர். அப்போது அப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அம்மா தலை நசுங்கியபடி இறந்து கிடக்கிறார் என்று கண்ணீர்மல்க கூறினார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். 

 கொலை செய்யப்பட்ட தாராபாய்

அப்போது துக்காராம் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க, படுக்கையறையில் தாராபாய், தலைநசுங்கிய நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சசிபாய், ஏட்டு பூமிநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு துக்காராம், தாராபாய் ஆகியோரின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தாராபாயின் குடும்பம் வசதியானது. ஆந்திராவைச் சேர்ந்த தாராபாயின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சென்னையில் குடியிருந்து வருகின்றனர். தாராபாயை துக்கராமுக்கு திருமணம் செய்துவைத்ததோடு புளியந்தோப்பில் உள்ள வீட்டையும் குடியிருக்க கொடுத்துள்ளனர். அங்குதான் துக்காராம் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவர், செருப்பு தைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். தாராபாய், கொளத்தூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிவந்துள்ளார். 

இவர்களின் மகன்கள் சஞ்செய்ராய் 9-ம் வகுப்பும் அனுமந்ராம் 7-ம் வகுப்பும், ஸ்ரீராம் 5-ம் வகுப்பும் படித்துவருகின்றனர். நேற்றிரவு 5 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் கிரைண்டர் கல்லை எடுத்து தாராபாய் தலையில் போட்டு கொலை செய்துள்ளார் துக்காராம். அதன்பிறகு மனைவியின் சேலையில் அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். 

அதிகாலையில் எழுந்த சஞ்செய்ராம், அப்பா தூக்கில் தொங்குவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் அம்மாவிடம் தகவலை தெரிவிக்கச் சென்றபோது அவரும் தலைநசுங்கியபடி இறந்துகிடந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். 

 மனைவியை கொலை செய்த துக்காராம்

எங்களின் முதற்கட்ட விசாரணையில் தாராபாய், அழகாக இருப்பதால் அவர் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு துக்காராம் தகராறு செய்துள்ளார். இதுதான் கணவன் மனைவிக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னையாக இருந்துவந்துள்ளது. மூன்று குழந்தைகள் பிறந்தபிறகும் இந்த பிரச்னை தொடர்கதையாக இருந்துவந்துள்ளது. இவர்கள் இருவரும் சண்டைபோடும்போது என்றாவது ஒருநாள் உன்னைக் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று தாராபாயிடம் துக்கராம் சொல்லுவதுண்டு. சம்பவத்தன்றுகூட கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. துக்காராம் சொல்லியபடி மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

தாராபாய், துக்காராம் ஆகியோரின் சடலங்களைப் பார்த்து மூன்று மகன்களும் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கலங்கவைத்தது. தகவலறிந்து வந்த தாராபாயின் உறவினர்கள், அழகாக இருந்ததற்காக இப்படி கொலை செய்துவிட்டானே என்று தாராபாயின் சடலத்தைப்பார்த்து கதறி அழுதனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறை முன், தாராபாயின் குடும்பத்தினர் சோகத்துடன் காத்திருந்தனர். துக்காராமின் சந்தேக நோயால் ஓட்டுமொத்த குடும்பமும் நிம்மதியை இழந்து தவித்துவருகிறது. இந்தச் சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.