` ஜெயலலிதாவை குற்றவாளி எனக் கூறக் கூடாது!'  - நீதிமன்ற உத்தரவால் உற்சாகத்தில் அ.தி.மு.க.  | Do not say Jayalalithaa is accused - Says madras highcourt

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (23/01/2019)

கடைசி தொடர்பு:14:20 (23/01/2019)

` ஜெயலலிதாவை குற்றவாளி எனக் கூறக் கூடாது!'  - நீதிமன்ற உத்தரவால் உற்சாகத்தில் அ.தி.மு.க. 

உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தனது விடுதலை நேரத்தில் மரணமடைந்து விட்டால் அதற்குப் பிறகு வழங்கப்படும் எந்த நீதிமன்ற தீர்ப்பும் அவரைக் குற்றவாளியாக்க முடியாது.

` ஜெயலலிதாவை குற்றவாளி எனக் கூறக் கூடாது!'  - நீதிமன்ற உத்தரவால் உற்சாகத்தில் அ.தி.மு.க. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டத் தடை கோரிய வழக்கில், இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ` முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரைக் குற்றவாளி எனக் கூறுவதை ஏற்க முடியாது' என மேற்கோள்காட்டி தெளிவுபடுத்தியுள்ளனர் நீதியரசர்கள். 

ஜெயலலிதா சமாதி

சென்னை, மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்குத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு பூமிபூஜையும் நடந்தது. நினைவிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால், மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், `சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு மெரினாவில் தமிழக அரசின் செலவில் நினைவிடம் கட்டுவது என்பது சட்டவிரோதமானது. இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த 2018 மே 4-ம் தேதி அவசரமாக அறிவிப்பு வெளியிட்டு, மே 6-ம் தேதியன்றே நினைவிடப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தியுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஜெயலலிதா சமாதி

இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதியரசர் ஆஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில், `நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை. நீதிமன்றம் கேட்டால் நினைவிட வரைபடத்தை தாக்கல் செய்கிறோம். விதிமுறைகள் வகுப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நினைவிடம் கட்டப்பட்டது. அதற்கு உள்ளேதான் தற்போது ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படவுள்ளது' என வாதிடப்பட்டது. 

இதைக் கேட்ட இந்திரா பானர்ஜி, `மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் உட்பட எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கடற்கரை ஒழுங்கு மண்டலம் அனுமதித்த பகுதிகளில் மட்டுமே கட்டடம் அமைக்க வேண்டும். மெரினாவைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு' எனக் கூறியிருந்தார். தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றம்

தீர்ப்பில், ` தமிழக அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்ட எந்தத் தடையுமில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை. உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தனது விடுதலை நேரத்தில் மரணமடைந்து விட்டால் அதற்குப் பிறகு வழங்கப்படும் எந்த நீதிமன்ற தீர்ப்பும் அவரைக் குற்றவாளியாக்க முடியாது என்று கபூர் Vs தமிழ்நாடு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஏற்கெனவே நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் மறைந்துவிட்ட ஜெயலலிதாவைத் தற்போதும் குற்றவாளிதான் என்று கூறும் வாதத்தை ஏற்கமுடியாது' எனக் கூறியுள்ளனர். 

ஜெயலலிதா சமாதி

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான வழக்கறிஞர் இன்பதுரை, `` முன்னாள் முதல்வருக்கு நினைவகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், 60 சதவிகிதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மார்ச் மாதத்துக்குள் திறப்பு விழா பணிகள் நடக்க உள்ளன. இந்தநேரத்தில், அவரைக் குற்றவாளி எனக் குறிப்பிட்டு சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் நிரபராதி என ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டார். மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தது. ஆனால், தீர்ப்பு வந்த காலத்தில் அவர் இறந்துவிட்டார். இந்தத் தீர்ப்பு அவரைக் குறிப்பிடாது. இதைத்தான் கபூர் Vs தமிழ்நாடு வழக்கு சுட்டிக் காட்டுகிறது. 

இதை மேற்கோள் காட்டி தமிழக அரசு வாதிட்டது. உயர் நீதிமன்றமும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இனி யாராவது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று பேசினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைக்கு ஆளாவார்கள். அரசியல்ரீதியாக அவரைப் பிடிக்காதவர்கள், சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளி எனத் தொடர்ந்து பேசி வந்தனர். நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது" என்றார் உற்சாகத்துடன்.