’’கட்சி போச்சு!’’ கரூர் தி.மு.கவில் செந்தில்பாலாஜி எபெஃக்ட் | 'Senthilbalaji is the beginning of the game!' - Stalin Karur Visit!

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (24/01/2019)

கடைசி தொடர்பு:10:49 (24/01/2019)

’’கட்சி போச்சு!’’ கரூர் தி.மு.கவில் செந்தில்பாலாஜி எபெஃக்ட்

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உச்சரித்த சில பெயர்களின் பட்டியலில் இருந்தவர்கள் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள்தான். விரைவில் நன்னியூர் ராஜேந்திரன் வகிக்கும் மாவட்டச் செயலாளர் பதவியையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் 80 சதவிகிதம் நெருங்கிவிட்டார்.

’’கட்சி போச்சு!’’ கரூர் தி.மு.கவில் செந்தில்பாலாஜி எபெஃக்ட்

``அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத் தி.மு.க-வைப் படிப்படியாகத் தனது பிடிக்குள் கொண்டு வந்துவிட்டார்" என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தான் எம்.எல்.ஏ-வாக இருந்த அரவக்குறிச்சி தொகுதி எல்லைக்குள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வைத்து இரண்டு ஊராட்சி சபைக் கூட்டங்கள், ஒரு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி, 'ஸ்டாலினே என் பிடிக்குள்தான்' என்று செந்தில்பாலாஜி சொல்லாமல் சொல்வதாக அவரின் ஆதரவாளர்கள் குதூகலிக்கிறார்கள்.

 கரூர் ஈசநத்தம் தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பல்வேறு பிணக்குகள் காரணமாக, கடந்த மாதம் 14-ம் தேதி தி.மு.க-வில் ஐக்கியமானார். இவர் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து கட்சி மாறி இருப்பதாகத் தற்போதைய தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பு ஆடிப்போனது. அதற்கேற்றவாறு, ஸ்டாலினை அழைத்து வந்து கரூர் மாவட்டத்தில் மூன்று நிகழ்ச்சிகளை, தனது எண்ணப்படி நடத்தி, நன்னியூர் ராஜேந்திரன் தரப்புக்கு இன்னும் கிலியை ஏற்படுத்தியிருந்தார். 'நமக்கு நாமே' பாணியில் இப்போது ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க தி.மு.க-வினர்களை ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தச் சொல்லி இருக்கிறார். அந்த வகையில்தான் நேற்று கரூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

முதலில், காலை 10 மணிக்கு ஈசநத்தம் பகுதியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்திலும், மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, நடைபெற்ற சின்னதாராபுரம் பகுதி ஊராட்சி சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார் ஸ்டாலின். அதன் பிறகு, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நொய்யல் குறுக்குச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதிலும், கலந்துகொண்டார் ஸ்டாலின். இந்த மூன்று இடங்களும் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ-வாக இருந்த அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிட்பட்ட பகுதிகள் என்பதுதான் ஹைலைட். 

 நன்னியூர் ராஜேந்திரன்(தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர்)`` `அரவக்குறிச்சி மறுதேர்தலுக்கான ஆயத்தம்' என்று இதைச் சமாளிக்கலாம். ஆனால், கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க கைப்பற்றிய ஒரே தொகுதியான குளித்தலைத் தொகுதியில் ஓர் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி இருக்கலாம். செந்தில்பாலாஜி தனது செல்வாக்கை நிரூபிக்கத் திட்டமிட்டே மூன்று கூட்டங்களையும் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நடத்தி இருக்கிறார். வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அநேகம் பேர் செந்தில்பாலாஜி ஆதரவாளவர்கள். ஏற்கெனவே தி.மு.க-வில் இருந்தவர்களை அவர் முகவர்களாக நியமிக்கவில்லை. இந்த விஷயத்தில் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை செந்தில்பாலாஜி மதிக்கவில்லை. அதேபோல், ஊராட்சி சபைக் கூட்டங்களில், மாவட்டச் செயலாளரைப் பின்னே அமரவைத்துவிட்டார்கள். வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உச்சரித்த சில பெயர்களின் பட்டியலில் இருந்தவர்கள் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள்தான். விரைவில் நன்னியூர் ராஜேந்திரன் வகிக்கும் மாவட்டச் செயலாளர் பதவியையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் 80 சதவிகிதம் நெருங்கிவிட்டார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மூலமாக, அதற்காக பக்காவாக பிளான் போட்டு செயல்படுகிறார். அதில் ஒரு செயல்பாடுதான் இந்த நிகழ்ச்சிகள். செந்தில்பாலாஜி ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது’’ என்று புகார் புராணம் பாடினார்கள் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பினர்.  

இதற்கிடையில், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேடையின் முன்புறமாக அமர்ந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயர்களை வாசித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இக்கூட்டத்தில், கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.

 ஸ்டாலின், செந்தில்பாலாஜி கரூர் பகுதியில்

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், ``ஆளும் எடப்பாடி அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம்கூட இதுவரை நடத்த முன்வரவில்லை. அதேநேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞக்கு, தமிழகம் முழுவதும் இரங்கல் கூட்டம் இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 'கறுப்புப் பணத்தை மீட்டெடுப்போம். ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூபாய் 15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைப்போம்' என்று வாக்குறுதி அளித்தார். இதுவரை,15 லட்சம் வேண்டாம் ரூபாய் 15,000-மாவது அல்லது 15 ரூபாயாவது வங்கியில் வரவு வைத்துள்ளாரா? நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், 'ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 

இவர், ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர். ஆனால், முன்பிருந்தே தி.மு.க, 'சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று கோரி வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என தி.மு.க.கூறிருந்தால், அத  'அரசியல் ஆதாயத்துக்காக தி.மு.க இப்படிக் கூறுகிறது' எனப் பழி சுமத்துவார்கள். எது எப்படியோ, அடுத்து தி.மு.க ஆட்சி அமைத்து நிச்சயம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும், அதைச் சந்திக்க வாக்குச்சாவடி முகவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து தி.மு.க-வின் முந்தைய சாதனைகளையும், தற்போதைய ஆளும் அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் சொல்லி, தி.மு.க-வுக்கு வாக்களிக்கக் களப்பணி ஆற்றிட வேண்டும் .

நாம் சாப்பிடும் ஒவ்வோர் அரிசியிலும் ஒருவரின் பெயர் இருக்கும் என்று கூறுவார்கள். அதுபோல, நீங்கள் தி.மு.க-வுக்கு வாங்கித் தருகிற ஒவ்வொரு வாக்கிலும் ஒருவருடைய பெயர் நிச்சயம் இருக்கும். அதற்கான பாராட்டையும் பலனையும் தி.மு.க தொண்டர்கள் நிச்சயம் அடைவார்கள் என உறுதியளிக்கிறேன். ஏனென்றால், நான் செயல் தலைவராகப் பொறுப்பேற்றபோது, ஒவ்வொரு மாவட்டக் கழகத்தையும், நகரத்தையும், பேரூர்க் கழகத்தையும் அழைத்துப் பேசினேன். அப்போது தலைவர் கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், தி.மு.க தலைவராக நான் தேர்வு செய்யப்பட்ட பிறகு, தி.மு.க-வின் மாவட்டக் கழகம், நகர, பேரூர்க் கழகம் ஆகியவற்றுடன் ஊராட்சி செயலாளர்களையும் அழைத்துப் பேசினேன். ஏனென்றால், இதுவரை தி.மு.க வரலாற்றில் ஊராட்சி செயலாளர்கள், மாவட்டக் கழகத்துக்கும், தலைமைக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. நான் தலைவராகப் பொறுப்பேற்றபோது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களையும் மற்ற கழக நிர்வாகிகளுடன் இணைத்து கழகத்தில் அழைத்துப் பேசினேன். அதுபோல, ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்களையும், அவர்கள் வாங்கிக் கொடுத்த ஒவ்வொரு வாக்குக்காகவும் நான் நிச்சயம் சந்தித்துப் பேசுவேன்" என்று முடித்தார்.

இதுபற்றி செந்தில்பாலாஜி தரப்பில் பேசினோம். ``அரவக்குறிச்சி மறுதேர்தலுக்கான தேர்தல் வியூக கூட்டமாக நடத்த கரூர் மாவட்ட தி.மு.க நினைத்ததால், மூன்று கூட்டங்களும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எல்லைக்குள் நடைபெற்றது. ஸ்டாலின் அனுமதியோடுதான் அப்படி நடந்தது. நன்னியூர் ராஜேந்திரன்தான் முன்னாடி நின்று இந்தக் கூட்டங்களை நடத்தினார். இதில், செந்தில்பாலாஜியின் தலையீடு எங்கேயும் இல்லை" என்று மறுத்தார்கள்.


டிரெண்டிங் @ விகடன்