தீவிரவாதிகளைப் பிடிக்க காத்திருந்த போலீஸாரிடம் சிக்கிய மதுபாட்டில் கடத்தல்காரர்கள்! | Police arrests gang illegally transport liquor bottles

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (23/01/2019)

கடைசி தொடர்பு:18:50 (23/01/2019)

தீவிரவாதிகளைப் பிடிக்க காத்திருந்த போலீஸாரிடம் சிக்கிய மதுபாட்டில் கடத்தல்காரர்கள்!

கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பாம்பன் பாலம் அருகே தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காகக் காத்திருந்த போலீஸாரிடம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவர் சிக்கினர்.

கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள்

தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் `சீ விஜில்' எனும் நடவடிக்கை கடந்த இரு நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இந்திய கடலோரக் காவல்படை, தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் காவல் துறையினர் இந்தப் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ராமேஸ்வரம் பகுதியில் டம்மி துப்பாக்கிகளுடன் ஊடுருவ முயன்ற போலி தீவிரவாதிகள் 11 பேரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு பாம்பன் பாலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜலெட்சுமி, எஸ்.ஐ சுதர்சன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். சீ விஜில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊடுருவலில் ஈடுபடும் தீவிரவாதிகள் வாகனம் மூலம் வருவதைக் கண்காணிக்க இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சிக்கிய வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட சுமார் 500 மதுபாட்டில்கள் சிக்கின. 

பாம்பன் பால நுழைவுப் பகுதியில் போலீஸார் காரை நிறுத்திய நிலையில் காரில் இருந்து இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் இண்டிகா காரில் கடத்தி வரப்பட்ட இந்த மதுபாட்டில்கள் ராமேஸ்வரம் பகுதியில் கள்ளத்தனமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது. இதையடுத்து அரியமான் பகுதியைச் சேர்ந்த இருள்வேல், சாத்தக்கோன் வலசைப் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார் மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காகக் காத்திருந்த போலீஸாரிடம் திருட்டுத்தனமாக விற்பதற்குக் கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்கள் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.