வக்பு வாரிய கல்லூரிப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு! - சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு | Madurai bench of HC transfers wakf board college professor appointment irregularities case to CBI

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (23/01/2019)

வக்பு வாரிய கல்லூரிப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு! - சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரிக்க  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் மதுரையில் இயங்கிவரும் கல்லூரியில், கடந்த 2017-ம் ஆண்டு, பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சர்தார் பாஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அன்வர் ராஜா எம்.பி மற்றும் அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியே அந்த நியமனங்கள் நடைபெற்றதாகவும், யூ.ஜி.சி விதிமுறைகளை மீறி அந்த நியமனங்கள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

அன்வர் ராஜா

மேலும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் பேராசிரியர் பணிக்காக ரூ.30 லட்சமும், மாற்று மதத்தினரிடம் ரூ.35 லட்சமும் லஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் சர்தார் பாஷா புகார் கூறியிருந்தார். அப்படி கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 30 பேராசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்திய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, 'இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என அவர், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பணம் அன்வர் ராஜா, நிலோபர் கபில் மற்றும் வக்பு வாரிய உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சர் நிலோபர் கபில்

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், சிபிஐ விசாரிக்க கடந்த நவம்பர் மாதமே புகார் அனுப்பியிருக்கிறார்.  அந்த மனுவை சிபிஐ தமிழக தலைமைச்செயலருக்கு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஆவணங்களைப் பார்க்கும்போது தவறுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிவதாகக் கூறினார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, 6 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். சிபிஐ விசாரணைக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.