`அவதூறு பரப்புகிறார்; ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வேண்டும்!’ - மேத்யூ மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு | cm edappadi filed a defamation case against journalist mathew samuel

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (23/01/2019)

கடைசி தொடர்பு:18:21 (23/01/2019)

`அவதூறு பரப்புகிறார்; ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வேண்டும்!’ - மேத்யூ மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு

கொடநாடு கொலை தொடர்பாக தமது பெயருக்குக் களங்கம் விளைவித்ததோடு, அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறி, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பழனிசாமி

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள்குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், இந்தக் கொலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார்.

மாநிலத்தின் முதல்வர்மீது சுமத்தப்பட்டிருந்த இந்தக் கொலைக் குற்றச்சாட்டால் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்தக் கொலைகளுக்குக் காரணம், முதல்வர் தான் எனத் தொடர்ந்து மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டிவருகிறார். இது தொடர்பாகப் பேசிய முதல்வரோ, ``சயான் கூலிப்படையைச் சேர்ந்தவர். அவர் கொள்ளையடிப்பதற்காகக் கொடநாடு பங்களா போகிறார். எப்படி பங்களாவுக்குள் போனார் என்பதை, எல்லா ஊடகங்களிலும் சொல்லிவிட்டார்.

மேத்யூ

மனோஜ் என்பவர், கேரளத்தைச் சேர்ந்த கொலைக் குற்றவாளி. 1991-ல் கேரளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அவர்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர் கொடுக்கும் ஸ்டேட்மென்டை வைத்துக்கொண்டு என்னைக் கொலைக் குற்றவாளி என்கிறார்கள். இது, தி.மு.க     -வின் கட்டுக்கதை" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள அவர், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் மேத்யூ பேசியுள்ளதாகவும், இதற்காக மேத்யூ ரூ.1.10 கோடி தர வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், வழக்கு முடியும் வரை தன்னைப் பற்றி பேச மேத்யூ சாமுவேலுக்குத் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவசர வழக்காகத் தொடரப்பட்டுள்ள இதன் விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி கல்யாணசுந்தரம் ஒப்புதல் அளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க