செங்கல்பட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் நிலையத்தில் தீ விபத்து! - ஒருவர் உயிரிழப்பு | One died in fire accident at chengalpattu Municipality site

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (23/01/2019)

செங்கல்பட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் நிலையத்தில் தீ விபத்து! - ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட குப்பை சேகரிப்பு நிலையத்தில் கார்பன் தயாரிக்கும் பாய்லர் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாகத் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஒரு ஊழியர் காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்கல்பட்டு நகராட்சி குப்பைக் கிடங்கு

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 34 வார்டுகளில் இருந்தும் நாள்தோறும் அகற்றப்படும் குப்பைகளை மட்கும் குப்பை மட்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் செங்கல்பட்டு, தூக்கு மரக்குட்டை பகுதியில் உள்ள கிடங்கில் தரம் பிரிப்பது வழக்கம். இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து கார்பன் தயாரிக்கும் பணியைச் செய்வதற்கு கோயம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பணிகளைச் செய்வதற்காக அந்த நிறுவனம் கோயம்பத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் முத்து ஆகியோரை நியமித்திருந்தது. இன்று காலை பாய்லர் அமைக்கும் பகுதியில் அவர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பாய்லர் மூடி வெடித்து ஜெயக்குமார் என்பவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார். அவருடன் பணிபுரிந்த முத்து, லேசான காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கார்பன் பாய்லர் விபத்து

`வெல்டிங் வைக்கும்போது தீப்பொறி அருகில் உள்ள கேஸ் குழாயில் விழுந்து தீப்பற்றியது. இந்தத் தீ பாய்லர் பகுதியில் பரவி பாய்லர் வெடித்தது. இங்கு பணியாற்றிய பணியாளர்கள் பாதுகாப்புக் கவசங்கள் எதையும் அணியவில்லை. பாதுகாப்புக் கவசம் அணிந்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம்’ எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close