பிணவறையில் சீட்டாட்டம்! - சென்னை அரசு மருத்துவமனையின் அதிர்ச்சி காட்சிகள் | employees playing cards in goverment hospital mortuary

வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (23/01/2019)

கடைசி தொடர்பு:19:16 (23/01/2019)

பிணவறையில் சீட்டாட்டம்! - சென்னை அரசு மருத்துவமனையின் அதிர்ச்சி காட்சிகள்

அரசு மருத்துவமனையில் சீட்டு விளையாடும் ஊழியர்கள்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறையில் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர் வேலை நேரத்தில் தைரியமாக சீட்டு விளையாடும் வீடியோ வைரலாகிவருகிறது. வீடியோ வெளியானதும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. 

 

 

வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. வடசென்னையைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால், அவர்கள் அனைவரும் இந்த மருத்துவமனையையே முழுமையாக நம்பியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் தினமும் காலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இந்த மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால் உடல் உறுப்புகளை இணைக்கும் நவீன வசதி உள்ளது. அதுதொடர்பாக நடந்த சிகிச்சைகள் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளன. இந்த மருத்துவமனைக்குத் தினமும் ஏராளமானவர்கள் வந்துசெல்கின்றனர். உள்நோயாளியாகவும் பலர் உள்ளனர். சில நாள்களுக்கு முன்கூட ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற அவரின் மகன் சதீஷ், காதலித்த பெண்ணைத் திருமணம் செய்த சம்பவம் நடந்தது.  

 மருத்துவமனை வளாகத்தில் பிரேதப் பரிசோதனைக்கூடம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக நீண்ட காலமாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய வீடியோவும் சில மாதங்களுக்கு முன் வெளியானது. உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 

அரசு மருத்துவமனையில் சீட்டு விளையாடும் ஊழியர்கள்

இதுகுறித்து பிரேதப் பரிசோதனைக்காக லஞ்சம் கொடுத்தவர்கள் கூறுகையில், ``ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் எங்களிடம் வலுக்கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு சிலர் லஞ்சம் கேட்கின்றனர். அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்கவில்லை என்றால் காலம் கடத்துகின்றனர். இல்லையெனில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இதனால்தான் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிடுகிறோம். லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான பிறகு ஊழியர்கள் முன்எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கிவிட்டனர். அதாவது, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மூலம் லஞ்சத்தைப் பெறுகின்றனர். பிணவறையில் உள்ள ஊழியர்கள் சொல்லும் ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். ஆம்புலன்ஸ் கட்டணத்துடன் ஊழியர்களின் தொகையும் வசூலிக்கப்படுகிறது. அரசின் இலவச அமரர் ஊர்திகளிலும்கூட மறைமுகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோகத்தில் இருப்பவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். யாரும் அவர்கள் மீது புகார்கள் கொடுப்பதில்லை. இருப்பினும், லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

 இந்தச் சூழ்நிலையில் பிரேதப் பரிசோதனை அலுவலகத்தில் மூன்று பேர் வேலை நேரத்தில் சீட்டு விளையாடும் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. வீடியோ குறித்து விசாரித்தபோது சீட்டு விளையாடியது பிணவறையின் பொறுப்பாளர் ரபீக். ஒப்பந்த ஊழியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எனத் தெரியவந்தது. 

 அரசு மருத்துவமனை பிணவறையில் சீட்டு விளையாட்டு

இதுகுறித்து மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, ``வீடியோ குறித்து என்னுடைய கவனத்துக்குத் தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு இன்ஷுரன்ஸ் ஊழியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் (சீட்டு விளையாடிய ஊழியர்கள்) அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

 சம்பந்தப்பட்ட ஊழியர் ரபீக்கை தொடர்பு கொண்டபோது அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடப்படும். 

 வேலைநேரத்தில் ஜாலியாக சீட்டு விளையாடும் மருத்துவமனை ஊழியர்களில் செயல் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.