ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் - பியூசிஎல் தீர்மானம் | PUCL urges government to close thoothukudi sterlite plant

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (23/01/2019)

கடைசி தொடர்பு:12:43 (24/01/2019)

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் - பியூசிஎல் தீர்மானம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு நடந்த தேசிய பசுமைத் தீர்ப்பாய வழக்கில், ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகளில் உள்ளனர் வேதாந்தா நிறுவனத்தினர். இந்நிலையில், பல்வேறு செயற்பாட்டாளர்களும் இயக்கங்களும், தூத்துக்குடி மக்களும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என ஒருமித்த குரலில் கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் திசை வழி’ என்ற மாநிலக் கருத்தரங்கு, ஜனவரி 20 -ம் தேதி மதுரையில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தால் (பியூசிஎல்) நடத்தப்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பியூசிஎல் மாநிலத் தலைவர் கண. குறிஞ்சி, மாநிலப் பொதுச்செயலர் க. சரவணன் ஆகியோர் கலந்துகொண்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்... 

1. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி துண்டறிக்கை வழங்கியதற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், மைக்கேல், வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோரைக் கைதுசெய்ததை பியூசிஎல் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வித நிபந்தனைகளுமின்றி, சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென பியூசிஎல் கோருகிறது.

2. தூத்துக்குடி நகரில் கூடுவதற்கோ, கூட்டம் நடத்துவதற்கோ காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுப்பதாகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆயுதங்களின்றி அமைதியான முறையில் கூடுவது, இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையாகும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்ட பிறகும், மக்கள் கூடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானது. எனவே, மாநில அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு,  கூட்டம் கூடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், இதற்குக் காரணமாக இருக்கும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரை தமிழக அரசு உடனடியாகப் பணிமாறுதல் செய்ய வேண்டும்.

3. தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு மரணமும், மரணத்தை ஏற்படுத்தும் கொடுங்காயங்களும் கொலைக்குச் சமமான குற்றச்சாட்டாகக் கருதப்பட வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டவர்களுக்கும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்களுக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் குற்றவியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட வேண்டும். அதேபோல, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் விளைவிக்கக்கூடிய கொடுங்காயத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் எதிர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட வேண்டும் என பியூசிஎல் வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட்

4. ஏற்கனவே போராட்டம் அறிவிக்கப்பட்ட மே 22-ஆம் நாளன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்,  அவரது ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாமல் போனது ஏன் என்பதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல, வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்த புகாரை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையையும் முறையிட்டவர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு உண்மைத் தன்மை அறியப்பட வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.

5. காவல்துறையினரின் ஒவ்வொரு கொடூர நடவடிக்கையும், ''அவர்கள் சீருடை அணிந்த (சில நேரங்களில், தூத்துக்குடியில்  போல சாதாரண உடைகளில்) குற்றவாளிகள்” போல் நடந்துகொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள், சட்டத்திற்கு முன்பு எந்தத் தண்டனையும் இல்லாமல், “கடமையைச் செய்யும் தற்காப்பு” போர்வையில் தப்பித்துக்கொள்கிறார்கள். அதனால், 1857-ம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போர் காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியால் இயற்றப்பட்ட அடக்குமுறைக் காவல் சட்டம் 1861ல் பொருத்தமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்திற்கு மாற்றாக, சீருடையில் உள்ளவர்கள் தங்கள் செயல்களுக்கும் தவறுகளுக்கும் பொறுப்பேற்கச் செய்கிற வகையில்,  மக்களுக்கு ஆதரவான புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமென பியூசிஎல் கோருகிறது.

6. பொது நலனை மேற்கோள்காட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை அறிவித்த மாநில அரசின் ஆணைச் சட்டத்தின் முன் செல்லத்தக்கதல்ல என்பது, முன்பு செய்யப்பட்டதைப் போல ஆலையை மீண்டும் திறப்பதற்கு சட்டபூர்வ அனுமதியைப் பெறுவதற்கு வழிவகை செய்வதுபோன்றது. அவை, மக்களின் கோபத்தைத் தற்காலிகமாகத் தடுத்துவைக்கும் நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. மாநில அரசு அதன் அரசியல் சட்டக் கடமைகளைச் செய்துகொண்டிருக்கிறது என்றால், ஆலையை மூடுவதாக அறிவிக்கப்பட்ட நோக்கத்தில் உண்மையாக இருக்கிறது என்றால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தின்படி உரிய நடவடிக்கையைப் பின்வரும் வகையில் எடுக்க வேண்டும்:

அ) நீர் (மாசு தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1974, காற்று (மாசு தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1981 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகியவற்றின் உரிய பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும் 
ஆ) மாசு அளவு (நச்சாக்கப்பட்ட நீர், காற்று மற்றும் நிலம் மற்றும் மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு)  தொடர்பாக விளக்கமான நிலை அறிக்கையை வெளியிட வேண்டும்
இ) நிலை அறிக்கையில் காணப்பட்ட மீறல்களைக் கருத்தில்கொண்டு,  ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உரிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்
ஈ) இறுதியாக, மக்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அந்த ஆலை சரிசெய்யமுடியாத நாசத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.

ஸ்டெர்லைட்

7. ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி தொடங்குவதற்கும், விரிவாக்கத்திற்கும் சிப்காட் நிறுவனத்தின்மூலம் அரசு கையகப்படுத்திய நிலங்களை சம்பந்தப்பட்ட மக்களுக்கு மீட்டுத்தரப்பட வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் இழப்புகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பண உதவியும், மருத்துவ உதவியும் ஸ்டெர்லைட்டின் செலவில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பியூசிஎல் வலியுறுத்துகிறது.

8. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தூத்துக்குடியோடு மட்டும் சுருங்கிவிடாமல், மாநிலம் தழுவிய அளவில் மக்கள் திரள் போராட்டமாக மாற, பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பரப்புரை நிகழ்த்தவும், செயல்பாடுகளை முன்னெடுக்கவும் பியூசிஎல் எடுக்கும் முன்முயற்சிகளுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டுமென பியூசிஎல் வேண்டுகிறது.