`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்!’ - டி.டி.வி.தினகரன் | ADMK is Sinking ship, says TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (23/01/2019)

`அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; கரைசேர்வது கடினம்!’ - டி.டி.வி.தினகரன்

`மூழ்கிக்கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலான அ.தி.மு.க கரை சேர்வது கடினம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், `` `சோழநாடு சோறுடைத்தது' என்பார்கள். ஆனால், இன்று மற்றுமொரு சோமாலியாவாக சோழ மண்டலம் மாறிவிடுமோ என்ற சூழல் உள்ளது. இந்நிலையில், நாம் வெறுமனே பழைமைபேசி புண்ணியமில்லை. திருவாரூர் பகுதியில் 30 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த உடன் வேட்பாளரை அறிவித்து நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி

 

ஆனால், பழைமை வாய்ந்த கட்சியாக இருக்கும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை நிறுத்த வலியுறுத்தி டெல்லியை நோக்கிச் சென்றார்கள். அ.தி.மு.க மூழ்கிக்கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பல். உயிர், ரத்தம், சதை போன்ற தொண்டர்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கொடநாடு கொலைகள் விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், அவர்கள் தண்டனை பெற்றே ஆக வேண்டும். ஸ்டாலின் என்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதியா? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அச்சப்பட்டுப் பேசுவது எனக்கு சந்தேகமாக உள்ளது. இந்த வழக்கை காவல்துறையோ, சி.பி.ஐ-யோ விசாரித்தால் சரியாக இருக்காது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும்.

செந்தில் பாலாஜி

எங்களை விட்டுச் சென்றவர்களுக்குத்தான் பாதிப்பு. சிலர் பதவிக்காகக் கட்சி மாறிப்போவதால், எங்க இயக்கம், கட்சிக்குப் பாதிப்பு வராது. செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு போயிருப்பதால், எங்களுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை. ஏனென்றால், இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் பலமான நிலையிலேயே உள்ளது’’ என்றார்.