தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்! | TN civil supplies corporation employees staged protest in Sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (24/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (24/01/2019)

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்!

சிவகங்கையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்  மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மண்டல மேலாளராக ராமசுப்பிரமணியராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளில் பேசுவதும், அலுவலகப் பணிகளைக் கவனிக்காமல் கோப்புகள் தேங்கியதால் சுமை தூக்குவோருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மண்டல மேலாளரை பணி மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஊழியர்கள், சுமை தூக்குவோர்கள் பணிக்குச் செல்லாததால் கிட்டங்கிகள் இயங்கவில்லை. 

இதுதொடர்பாக மண்டல மேலாளர் ராமசுப்பிரமணியராஜாவிடம் பேசினோம். ``இங்கு மாறுதலில் வந்து ஒன்றரை மாதங்களாகிறது. பொங்கல் பொருள்கள், ரேஷன் பொருள்கள் விநியோகம் எனத் தொடர்ச்சியாக வேலைகள் இருந்ததால் பணியாளர்களை குறையின்றி வேலை பார்க்க வலியுறுத்த வேண்டியிருந்தது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், என்னால் எந்தக் கோப்புகளும் தேக்கமடையவில்லை. யாரையும் தகாத வார்த்தைகளால் பேசவில்லை. இதுதொடர்பாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியவர்களோடு நானே பேச்சுவார்த்தை நடத்தியபோது, அப்படியெல்லாம் பேசவில்லை என்றே தெரிவித்தனர்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க