"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்!" - மேத்யூ | Mathew samuel interview in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (24/01/2019)

கடைசி தொடர்பு:16:10 (24/01/2019)

"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்!" - மேத்யூ

 சாமுவேல் மேத்யூ

கடைசியாக, சாமுவேல் மேத்யூவின் கொந்தளிக்கும் குரலை ஒடுக்குவதற்கு, நீதிமன்றப்படியேறி, அதில் வெற்றியும் பெற்று விட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு கொள்ளை, கொலை மற்றும் தொடர் மர்ம மரணங்கள் குறித்து, டெல்லியில் கோடிவாலாவை கொளுத்திப் போட்ட மேத்யூவை அங்கேயே தூக்குவதற்கு, தமிழக காவல்துறை எவ்வளவோ முயன்றது. அது முடியாமல் போனது. கடைசியில், சென்னைக்கே வந்து அவர் பேட்டி கொடுத்ததில், தடுமாறிப் போனது தமிழக போலீஸ். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி, மேத்யூ உட்பட கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் பேசக்கூடாது என்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, தடை வாங்குவற்கு முன்பு...சென்னை விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும், எப்படியாவது அவரை அள்ளிப் போக முயன்ற போலீசாருக்கு, ‘டேக் டைவர்ஷன்’ கொடுத்து, ஓடும் காரில் சாமுவேல் மேத்யூவிடம் எடுத்த ‘செம ஸ்பீடு’ பேட்டி இது..

மேத்யூ

சென்னை வந்திருக்கீங்க…இங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க?

கொடநாடு விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணை வேண்டி வழக்கு தொடரவும், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து, உயர்நீதிமன்றத்தில் பெட்டிஷன் போடவுமே, நான் இங்கு வந்துள்ளேன்.

நீங்கள் வழக்கு தொடருவது தமிழக அரசுக்கு எதிராகவா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவா?

நான் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை, தமிழக முதல்வருக்கு எதிராகத்தான் போகிறேன்.

எடப்பாடி சொல்லித்தான் கொடநாடு கொள்ளையை நிகழ்த்தியதாக, கனகராஜ் சொன்னதாக நீங்கள் சொல்கிறீர்கள். கனகராஜே உயிரோடு இல்லாத நிலையில், நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது? வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?

நிறையத் இருக்கின்றன…விசாரணை நடக்கும்போது தான், அந்த ஆதாரங்களை நான் தருவேன். கனகராஜ் மர்மமாக இறந்தது தானே இங்கே பிரச்னை,அதைத் தானே கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.. ஒரு கிளை போய் விட்டது… இன்னும் நிறைய இருக்கிறது அல்லவா!

சாமுவேல்

ஆதாரம் இருந்தால் இப்போதே ஊடகங்களிடம் தர வேண்டியது தானே…

சில விஷயங்கள் மட்டும் தான் மீடியாவில் வரவேண்டும். சில விஷயங்கள் மற்றும் ஆதாரங்களை  விசாரணை அமைப்பிடம் மட்டுமே கொடுக்க முடியும். நாம் வெறும் பத்திரிகையாளர் மட்டும் தான். நம்மால் யாரையும் விசாரணை கூட பண்ண முடியாது. மீடியாவில் வரும் எல்லா ஆதாரங்களும் உண்மை இல்லையே? நிறைய விசாரணை அமைப்புகள் இருக்கின்றன. அவை விசாரித்தால் தான் சரியாக இருக்கும். நான் சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு ஆதாரங்களைக் கொடுக்க ரெடியாக இருக்கிறேன்,எடப்பாடி போலீசிடம் அல்ல!

சி.பி.ஐ. மீதே பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன…அப்படி இருக்க இந்த விசாரணை சி.பி.ஐ எடுத்தால் முறையாக விசாரிக்கப்படும் என நினைக்கிறீர்களா?

சி.பி.ஐ மட்டும் தான் சுதந்திரமான விசாரணை அமைப்பு. அது எடப்பாடிக்கு கீழே இயங்கும் அமைப்பு இல்லை அல்லவா… அதனால் தான்  சயன் மற்றும் மனோஜ் கைது பற்றிய விசாரணையை மற்ற மாநிலத்தில் விசாரிக்க வேண்டுவேன். அப்பொழுது தான் முறையாக நடக்கும்

தி.மு.க.தான் உங்கள் பின்னால் இருக்கிறது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டுகிறது. அது உண்மையா?

எனக்கு திமுக தலைவர்களையும் தெரியாது அதிமுக தலைவர்களையும் தெரியாது. நான் முதல் முறையாக ஆழமாக தமிழ்நாட்டு பிரச்னை குறித்து பேசப்போகிறேன்!

சாமுவேல்

எடப்பாடி பழனிச்சாமியை குற்றம்சாட்டிய பின் எந்தக் கட்சியாவது உங்களை தொடர்பு கொண்டதா?

இது வரை இல்லை, எனக்கு அதில் விருப்பமும் இல்லை!

சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமின் எடுத்தது தி.மு.க.வினர் தான். ஜாமின் தொகையும் திமுக வழக்கறிஞரால் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது… இதை வைத்து பார்த்தால் பின்னால் திமுக இருக்கிறது என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது?

அன்றைக்கு ஜாமீன் தொகையை பலர் கொடுக்க முன் வந்து இறுதியில் பின்வாங்கிட்டாங்க. அதனால் நான் வழக்கறிஞருக்கு பணத்தை அனுப்பி வைத்தேன் ஜாமினில் எடுப்பதற்கு. என்கிட்ட அந்த ஆதாரமும் இருக்கிறது. 22,000+5000 அதில் 5000 வழக்கறிஞரின் சம்பளம். நான் பல தடவை வழக்கறிஞர்களைப் போனில் அழைத்துப் பேசினேன். நான் அவ்வளவு அரசியல் செல்வாக்கு உடையவனாக இருந்தால் நான் ஏன் இத்தனை தடவை அழைத்து பேசப் போகிறேன்?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உயிருக்கு ஆபத்து போன்று எதுவும் போன் மிரட்டல் வந்ததா?

இல்லை,பேஸ்புக்கில் சிலர், கொலை செய்துவிடுவேன், தமிழ்நாட்டு பிரச்னைகளை பேசாதே என்றெல்லாம் அவ்வப்போது அனுப்புவார்கள். நான் கண்டு கொள்வதில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் மற்றும் சயன் மற்றும் மனோஜ் கைது கண்டு உங்களுக்கு பயமாக இருக்கிறதா?

இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். நான் மனோஜ் மற்றும் சயன், துறவியோ அல்லது ஒன்றும் அறியாதவர்களோ என்று சொல்லவில்லை, அவர்கள் பிரஸ் மீட்க்கு வருவதற்கு முன்பே, அவர் வாக்குமூலம் என்னிடம் கொடுத்தனர்.

நீங்கள் எடப்பாடி அவர்கள் மேல் குற்றச்சாட்டு சொன்னீங்க,ஜெயலலிதா அவர்களின் இறப்பிலும் மர்மம் இருப்பதாக நினைக்கிறீங்களா?

கண்டிப்பாக ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த நிறைய டாக்டர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறது. அவர்களும் வெளியே சொல்ல ரெடியாக இருக்கிறார்கள். விரைவில் வருவார்கள், பின் புதிய அத்தியாயமே பிறக்கும். 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா இல்லையா என்பதை தான் விசாரிக்கத் தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இருக்கிறதே?

அது ஒரு ஸ்கிப்டட் விசாரணை ஆணையம், அவங்க 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சசிகலா மற்றும் தினகரனை குற்றம்சாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. பழனிசாமி அரசியலில் மிக அழகாக விளையாடுவார்.

சாமுவேல்

ஜெயலலிதாவின் இறப்பில் என்ன மர்மம் இருக்கிறது?

மர்மம் இருக்கிறது, நான் விரிவாக பேச டாக்டர் இல்லை,ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அடுத்து உடனடியாக வருமானவரிதுறை சோதனை நடந்தது? என்னை சந்தித்த 4 ஐ.ஆர்.எஸ் ஆபீசர்கள் இதை சொன்னார்கள்!

அவரது அமைச்சரவையில் இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டிலே சோதனை நடந்ததே? அவர் முதலமைச்சராக இருந்து அவரே எப்படி அதைச் செய்வார்?

நீங்கள் அவரை லேசுப்பட்டவர் என்றா நினைக்கிறீர்கள்? அவர் சாதாரண தமிழன் இல்லை! இந்த லிங்கை முடிவு கட்டத் தான் 5 கொலைகளை செய்துள்ளார் எடப்பாடி!

கொடநாடு பங்களாவில் சில வாட்ச்கள் காணாமல் போனதாக போலீஸ் சொன்னது, நீங்கள் என்ன காணாமல் போனதாக நினைக்குறீங்க?

இதை எப்படி நம்புவது…கொள்ளைக்காக கனகராஜ் 50,000 ரூபாய் கொடுத்து இருக்கிறார் .இந்த வாட்ச்களைக் கொள்ளை அடிக்க இவ்வளவு செலவு பண்ண வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பேசும்போது, ‘கொடநாடு ஜெயலலிதா ஒய்வுக்குச் செல்லும் பங்களா. அங்கே விலை உயர்ந்த பொருட்கள் வைக்க அவசியம் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்களே…
 

அது வெறும் ஒய்வு எடுக்கும் பங்களா இல்லை அது தற்காலிக தலைமைச் செயலகமாக இருந்தது, அங்கு பொருட்கள் இல்லலாமல் எப்படி இருக்கும்?அங்கே நிறைய தலைவர்களின் ஊழல் குறித்து தன்னிடம் ஒப்புக்கொண்ட பல ஆதாரங்களை ஜெயலலிதா பதிவு செய்து வைத்திருந்தார்.

சென்னை வந்து இறங்கி இருக்கீங்க..,உங்களுக்கு சென்னை போலீஸ் குறித்து பயம் இருக்கிறதா?

எனக்கு எந்த போலீசைப்பார்த்தும் பயமில்லை. நீங்கள் எடப்பாடி போலீஸா இருங்க. மோடி போலீஸா இருங்க முதல்ல நீங்க போலீஸ்… அவங்க போவாங்க நீங்க இங்க தான் இருப்பீங்க…நியாயமா நடந்துக்கோங்க!

நீங்கள் ஒரு தலைவரை பணம் கேட்டு மிரட்டினீர்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே?

இல்லை, அது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு… அவர்கள் மனோஜ் மற்றும் சயனை சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்…நான் என்னுடைய பத்திரிக்கையாளர் பணியில் எந்த தவறையும் செய்ததில்லை என்பதே உண்மை!