``ஏழைத் தாயின் மகன் செய்யும் வேலையா இது?” - இடஒதுக்கீடு விவகாரத்தில் மோடியைச் சாடிய ஸ்டாலின்! | Stalin speech in trichy meeting

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (24/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (24/01/2019)

``ஏழைத் தாயின் மகன் செய்யும் வேலையா இது?” - இடஒதுக்கீடு விவகாரத்தில் மோடியைச் சாடிய ஸ்டாலின்!

“வரவிருக்கின்ற தேர்தலில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு வேலைதான். அது, மோடியை வீட்டுக்கு அனுப்புவது. நமக்கு இரண்டு வேலைகள் காத்திருக்கின்றன.  மோடியோடு சேர்த்து எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இந்த ‘தேசம் காப்போம் மாநாடு’ தொடக்கமாக அமையட்டும்” என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார். 

ஸ்டாலின்
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், “தேசம் காப்போம்” என்கிற தலைப்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தேசம் காப்போம் என்ற தலைப்பில் சனாதனத்தை வேரறுப்போம்! புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுப்போம்! என்று இந்த மாநாட்டிற்கு திருமாவளவன் ஒரு முழக்கத்தை வடிவமைத்துத் தந்திருக்கின்றார். எப்போதுமே அவருடைய முழக்கங்கள் கூர்மையானதாகத்தான் இருக்கும்.

நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலே சனாதனத்துக்கும் - ஜனநாயகத்துக்குமான தேர்தல். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் காலத்தில் சனாதன சக்திகள் ஆட்சியில் இல்லை. ஆனால், இன்று ஆட்சிக்கே வந்துவிட்டார்கள். எனவேதான், நாம் இன்னும் கூர்மையாகப் போராட வேண்டும். அதனால்தான் இந்த மாநாட்டை  திருமாவளவன் இங்கே கூட்டியிருக்கின்றார். பாகிஸ்தானாலோ, சீனாவினாலோ இந்தத் தேசத்துக்கு ஆபத்து வரவில்லை. தேசத்தை யார் ஆள்கிறார்களோ அவர்களால்தான் ஆபத்து வந்திருக்கிறது. அதனால்தான், ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பை இன்றைக்குத் தேர்ந்தெடுத்து, இதை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நான்கு நாள்களுக்கு முன்னால், கொல்கத்தா மாநகரத்திலே நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன். அந்த மாநாட்டில் பல்வேறு மாநிலத்தினுடைய முதலமைச்சர்கள், பல மாநிலத்தினுடைய முன்னாள் முதலமைச்சர்கள், இந்திய நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு அரசியல் கட்சியினுடைய தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்று 22 கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள், ஏன் இந்தியாவே திரண்டிருந்தது அந்த மேடையில் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த மேடையில் பேசிய அனைவரும் முழக்கமிட்டது ஒன்றே ஒன்றுதான். ‘நரேந்திர மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்’ என்ற அந்த முழக்கம்தான்.

ஸ்டாலின்

நான் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். அதைத்தான் இங்கு எல்லோரும் என்னிடத்தில், ஏன் நம்மிடத்தில் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார்கள். "இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர்தான் மே மாதம் நடக்க இருக்கக்கூடிய ஜனநாயகப் போர்க்களம்" என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன். பா.ஜ.க-வை எதிர்ப்பவர் தேசத்துரோகி என்றால், அந்தப் பட்டத்தை நாங்கள் பெருமையோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம். அதை மரியாதைக்குரிய பட்டமாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படக்கூடிய ‘கார்ப்பரேட் அரசு  மோடி அரசு’ என்று நான் கொல்கத்தாவில் குற்றம் சாட்டினேன். இது ஒரு அரசாங்கமே அல்ல, மோடியால் நடத்தப்படுகின்ற பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

ஒரு அரசாங்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்கள். "நீதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சமூக பொருளாதார வாழ்க்கை முறைகளைச் சீர்திருத்த அஞ்சாத அரசாங்கமே அவசரத் தேவை" - என்று சொல்லியிருக்கின்றார்.
மோடிக்கும், நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சமீபத்தில் அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய பொருளாதார இட ஒதுக்கீடு. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரட்டும் அதை நான் தடுக்கவில்லை. அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை.

ஆனால் அதே நேரத்தில், சமூக நீதியான இட ஒதுக்கீட்டுக்குள் அதனைக் கொண்டுவந்து, சமூக நீதித் தத்துவத்துக்குக் குழி தோண்டுவது தான் மோடியினுடைய மனு நீதி. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களில் முற்பட்ட வகுப்பினர் என்றால், பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லையா? ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் என்றால், மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கக்கூடியவர்கள் ஏழையா? இப்படிச் சொல்வதன் மூலமாக உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்திருக்கின்றார். ஏழைத் தாயினுடைய மகன் என்று அடிக்கடி மோடி சொல்லுகின்றார். இது, ஏழைத் தாயின் மகன் செய்யக்கூடிய வேலையா?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர் சொன்னார், ‘நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று சொல்லி வந்தார். இதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் செய்கின்ற காரியமா? ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இன்னொன்றையும் மோடி சொன்னார்: நான் ‘டாக்டர் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றப்போகிறேன்’ என்று, இதைவிட அம்பேத்கருக்கு அவமானம் தேடித்தரும் வேறு கரியம் ஏதேனும் உண்டா? நான் கேட்கின்றேன்.

ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் விரும்பிய சமூக நீதி ஆட்சியை நடத்தியது நீதிக் கட்சியின் ஆட்சி. அதைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி. 

ஒரு அரசாங்கம் என்பது நீதிக்கான அரசாங்கமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். அத்தகைய நீதிக்கான அரசாங்கமாக கருணாநிதி தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கியது. அநீதியான அரசாங்கத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய மோடி அரசாங்கம்.

தேசத்தையே 41 சதவிகிதத்துக்கு விற்கக்கூடிய அரசாங்கம்தான் இந்த மோடி அரசாங்கம். எனவே, இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 41 சதவிகிதம் அல்ல 100 சதவிகிதத்தையும் விற்றுத் தீர்த்துவிடுவார்கள்.  அந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

இந்த சூதாட்டத்தை நாம் தடுத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் ஒன்று கூடின. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேலைதான் உண்டு. அந்த ஒரு வேலை எதுவென்று கேட்டால் மோடியை வீழ்த்துவது. ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் இரண்டு வேலை வந்திருக்கின்றன. எடப்பாடியையும் சேர்த்து வீழ்த்தவேண்டிய வேலை நமக்கு வந்துசேர்ந்திருக்கிறது. எடப்பாடி, ஏற்கெனவே தமிழ்நாட்டை 100 சதவிகிதம் விற்றுவிட்டார்.

அவர்கள் இருவரும் ஒன்றாக வந்தாலும், பேசி வைத்துக்கொண்டு தனித்தனியாக வந்தாலும் - நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களை வீழ்த்துவதற்குத் தயாராவோம். அதற்கு முன்னோட்டமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் அவர்கள் கூட்டியிருக்கக்கூடிய இந்தக் கூட்டம் அதற்கு அடையாளம் காட்டுகிறது. அதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது” என்றார்.