புதுக்கோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து -12 பேர் படுகாயம் | Pudukkottai tourist bus accident

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:09:48 (24/01/2019)

புதுக்கோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து -12 பேர் படுகாயம்

புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட 12 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

விபத்து

கமுதி அருகே உள்ள ஆனையூரில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்காக உறவினர்கள், நண்பர்கள் என 15 -க்கும் மேற்பட்டோர் திருத்தணியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில் புறப்பட்டனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர்(45) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். சுற்றுலா வேன், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே உள்ள மேலூர் பகுதியில் வரும்போது டிரைவர் தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன், சாலையோரத்தில் உள்ள வயல்பகுதியில் பலத்த சத்ததுத்துடன் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம்செய்த தாம்பரத்தைச் சேர்ந்த முஸ்தபா (48) திருத்தனியைச் சேர்ந்த முகமது ஆசிக் (18) அதே பகுதியைச் சேர்ந்த முகமது மாலிக் (23) மீரா (16) சாஜிதாபானு (18) அனீஸ்பாத்திமா (35) ஜியாவுல்ஹக் (34) சென்னையைச் சேர்ந்த மஜீத் (56) உள்ளிட்டவர்கள் படுகாயமடைந்தனர். வேன் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர்.

காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் இட்டனர். இதைப்பார்த்த மக்கள், வெள்ளனூர் போலீஸாருருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்பு, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காயமுற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்