ரஷ்யக் கடல் பகுதியில் தீப்பிடித்த கப்பல்கள்; தமிழக மாலுமி மாயம் - குடும்பத்தினர் கண்ணீர் | ship explosion off Russian coast; tamilnadu sailor went missing

வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (24/01/2019)

கடைசி தொடர்பு:11:24 (24/01/2019)

ரஷ்யக் கடல் பகுதியில் தீப்பிடித்த கப்பல்கள்; தமிழக மாலுமி மாயம் - குடும்பத்தினர் கண்ணீர்

ரஷ்யக் கடல் பகுதியில் நடந்த கப்பல் விபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாலுமி செபாஸ்டின் பிரிட்டோ (24) மாயமாகியுள்ளார். இதனால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

செபாஸ்டின் பிரிட்டோ


ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த இரண்டு சரக்குக் கப்பல்கள், கடந்த 21-ம் தேதி, ரஷ்யக் கடல் பகுதி எல்லையான கெர்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிவாயு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு கப்பலில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ மற்றொரு கப்பலுக்கும் பரவியது. இந்த விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் பலர் கடலில் மாயமானதாகவும் கூறப்படுகிறது.

கப்பல் விபத்து

இந்நிலையில் மேஸ்ட்ரோ என்ற கப்பலில் பணியில் இருந்த குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன் துறையைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் மாலுமி செபாஸ்டின் பிரிட்டோ (24) என்பவர் விபத்தில் மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரை தேடும் பணியில் ரஷ்யக் கடற்படை ஈடுபட்டுவருவதாக, உறவினர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இந்தியத் தூதரகம் தரப்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகம் தரப்பிலோ எந்தவித தகவல்களையும் கேட்டுப் பெறவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். கடலில் மாயமான தங்கள் மகனின் நிலைகுறித்து உரிய தகவல்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.