8 ஊராட்சி ஒன்றியங்கள்...14,544 குடும்பங்கள் - கரூரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர்த் திட்டம்! | Drinking Water Project in karur district

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (24/01/2019)

கடைசி தொடர்பு:11:05 (24/01/2019)

8 ஊராட்சி ஒன்றியங்கள்...14,544 குடும்பங்கள் - கரூரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர்த் திட்டம்!

 "கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், நடப்பாண்டில் 14,544 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 178.12 லட்சம் மதிப்பிலான குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர்த் திட்டப் பணிகளை கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, புஞ்சைகடம்பங்குறிச்சி, காதப்பாறை, மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட குடிநீர்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
 

கரூர்

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், "கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள கிராமங்கள் என அறியப்பட்டதன் அடிப்படையிலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்று நிலையங்கள்,
நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட ரூ.178.12 லட்சம் மதிப்பிலான குடிநீர்த் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின்மூலம் தாய் திட்டத்தின் கீழ் ரூ.63.30 லட்சம் மதிப்பீட்டில், 3லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. இதில் ஏற்றப்படும் நீர், அரசு காலனி, பஞ்சமாதேவி அக்ரஹாரம், கவுண்டன்புதூர், காலிபாளையம், பூந்தோட்டம், சந்தனகாளிபாளையம், பதினாறுகால் மண்டபம், சாமியான்தோட்டம் உள்ளிட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 5,903 குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அதற்காக, இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

புஞ்சை கடம்பன்குறிச்சி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் அறை ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவருகிறது. இதன்மூலம்,14,544 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமானப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்" என்றார்.