'விஸ்வாசம்' ரசிகர் காட்சிக்கு உதவினாரா பி.ஜே.பி. பிரமுகர்?! கட்சியில் இணைந்தார்களா அஜித் ரசிகர்கள்!? #Verified | More insights on the Viswasam movie and Ajith fans joining BJP incident

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (24/01/2019)

கடைசி தொடர்பு:13:27 (24/01/2019)

'விஸ்வாசம்' ரசிகர் காட்சிக்கு உதவினாரா பி.ஜே.பி. பிரமுகர்?! கட்சியில் இணைந்தார்களா அஜித் ரசிகர்கள்!? #Verified

விஸ்வாசம் படத்துக்குத் திரையரங்கில் ரசிகர் சிறப்புக் காட்சியைப் பெற பா.ஜ.கவினர் உதவியதால், தனிப்பட்ட முறையில் பா.ஜ.கவில் இணைந்துகொண்டதாக சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அஜித் ரசிகர்கள் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

'விஸ்வாசம்' ரசிகர் காட்சிக்கு உதவினாரா பி.ஜே.பி. பிரமுகர்?! கட்சியில் இணைந்தார்களா அஜித் ரசிகர்கள்!? #Verified

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர்கள் பி.ஜே.பி-யில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழிசை, ``அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் பி.ஜே.பி-யில் இணைந்த சம்பவமும், தமிழிசை பேசிய கருத்தும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட, இதனையடுத்து நடிகர் அஜித்தின் தரப்பில் இருந்தே ஒரு நீண்டநெடிய விளக்க அறிக்கையும் வெளியிடப்பட்டது. ``அரசியலில் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார்மீதும் திணிப்பது இல்லை. அதேபோல மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்கவிட்டதும் இல்லை. என் ரசிகர்களிடமும் இதையேதான் எதிர்பார்க்கிறேன். உங்களின் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை” என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையானது, கடந்த 2 நாள்களாகச் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், `விஸ்வாசம்' படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சியைப் பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர் பெற்றுத் தந்தார் என்கிற சர்ச்சை தற்போது எழுந்திருக்கிறது.

பிஜேபி-யில் இணைந்த அஜித் ரசிகர்கள்

இந்தநிலையில், திருப்பூரில் பி.ஜே.பி-யில் தங்களை இணைத்துக்கொண்ட `தல' ரசிகர்கள் ஒரு வாட்ஸ்அப் ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பேசும் ஹரி என்பவர், ``நான்கு வருடங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்தும் திருப்பூரில் ஒரு குறிப்பிட்ட தனியார் திரையரங்கில் `தல' படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சியை எங்களால் வாங்க முடியவில்லை. ஆனால், இந்தமுறை பி.ஜே.பி-யைச் சேர்ந்த நெருங்கிய நண்பர் மோதிலால் என்பவரின் உதவியால், அந்தத் திரையரங்கில் `விஸ்வாசம்' படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சியைப் பெற்றோம். எனவே, அவர் நடத்திய பி.ஜே.பி. கூட்டத்துக்குத் தனிப்பட்ட முறையில் நான் கலந்துகொண்டேன். செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள நான் நினைக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் அப்துல்கலாம் லட்சிய இந்தியக் கட்சி சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போதுகூட, `தல' ரசிகர் என்ற பெயரை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை" என்று அதில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஹரியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவரும் அதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், ``மோதிலால் என்னுடைய நண்பர். எங்களுக்காக நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அவர், தமிழிசை கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தார். எனவே, நட்பு அடிப்படையில் நான் ஒரு விருந்தினராக மட்டுமே அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன். பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டோம் என்பது தவறான தகவல்" என்றார்.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட பி.ஜே.பி. இளைஞர் அணி துணைத் தலைவர் மோதிலால், ``ஹரியும் நானும் 15 வருடகால நண்பர்கள். பி.ஜே.பி-யின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பற்றி அவரிடத்தில் விவரித்தேன். அவரும் விருப்பத்துடன் முழுவீச்சில் பி.ஜே.பி-யில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். குறிப்பாக, இளைஞர்கள் என்ற அடிப்படையில்தான் கட்சியில் இணைந்தார்கள். ஆனால், அந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் அஜித் ரசிகர்களாக இருந்ததால் அவரைப் பற்றிப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது" என்றார்.

அஜித் ரசிகர்

ஆனால், திரையரங்கில் ரசிகர் சிறப்புக் காட்சி எடுப்பதற்குப் பி.ஜே.பி-யினர் உதவினார்கள் என்ற தகவல் தற்போது புதியதொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து திரையரங்க வட்டாரத்தில் விசாரித்தோம். ``பொதுவாகவே முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, தமிழகத்தின் திரையரங்குகளில் அதிகாலை ரசிகர் சிறப்புக் காட்சிகள் திரையிடுவது வாடிக்கை. பெரும்பாலும், அந்த ரசிகர் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்களை திரையரங்க நிர்வாகமே ஒரு பெரிய தொகைக்கு ரசிகர் மன்றங்களுக்கு மொத்தமாக விற்றுவிடுவார்கள். பின்னர் ரசிகர் மன்றத்தினர், அந்த டிக்கெட்களை ரசிகர்களிடத்தில் ஆயிரக்கணக்கில் விலை வைத்து விற்பார்கள். இது அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் பொருந்தும். ஆனால் ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்றங்களை முறையாக நிர்வகித்து வருவதால், அந்தந்த மாவட்டத் தலைமை ரசிகர் மன்றத்தினரே ரசிகர் சிறப்புக் காட்சியைத் திரையிட அனுமதிபெறுகிறார்கள். ஆனால், அஜித் படங்களைப் பொறுத்தவரையில் நிலைமையே வேறாக உள்ளது. பல வருடங்களுக்கு முன்னரே, அஜித் தன் ரசிகர் மன்றங்களை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டதால், அவருடைய திரைப்படங்கள் வெளியாகும்போது பல அஜித் ரசிகர் குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு சம்பந்தப்பட்ட திரையரங்குகளை அணுகி ரசிகர் சிறப்புக் காட்சியைப் பெற முயற்சி செய்கிறார்கள். இதில் உள்ளூர் அரசியல் சார்புடன் வரும் அஜித் ரசிகர்களுக்கு எளிதாக ரசிகர் சிறப்புக் காட்சியைத் திரையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்காரணமாகவே தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி. எனக் கட்சிப் பிரமுகர்களுடன் தங்களை நெருக்கமாக்கிக் கொள்கிறார்கள், சில அஜித் ரசிகர்கள்" என்றனர்.

``பி.ஜே.பி-யில் இணைந்த அந்தத் திருப்பூர் மாவட்ட `தல' ரசிகர்கள், ஏற்கெனவே `விஸ்வாசம்' திரைப்படம் வெளியான சமயத்தில் படம் வெற்றிபெற வாழ்த்தி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக சென்னைப் பதிப்பில், கொடுக்கப்பட்ட அந்த விளம்பரத்திலும்கூட பி.ஜே.பி-யின் கோட்டப் பொறுப்பாளர் பாயின்ட் மணி, திருப்பூர் மாவட்ட பி.ஜே.பி. தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகளின் புகைப்படங்களைச் சேர்த்திருந்தார்கள். அப்போதே `தல' தரப்பிலிருந்து அழைத்துக் கண்டித்திருந்தால், இதுபோன்ற நிகழ்வைத் தடுத்திருக்கலாம்" என்கிறார்கள், `தல' அபிமானிகள்.

ஏற்கெனவே அரசியல் சார்பு குறித்த விவாதம் தொடங்கியதால்தான் தன்னுடைய ரசிகர் மன்றங்களையே மொத்தமாகக் கலைத்தார் நடிகர் அஜித். ஆனால், அதன்பிறகும் அவரது பெயரில் ரசிகர் மன்றம், ரசிகர் இயக்கம் என இயங்கிக்கொண்டு `தல' விருப்பத்துக்கு மாறாக அரசியல் சார்புடன் சிலர் செயல்படுகிறார்கள். அதற்கு இந்த நிகழ்வும் ஓர் உதாரணமாகிவிட்டது.


டிரெண்டிங் @ விகடன்