‘தாசில்தாரையே கைதுசெய்வீர்களா?’ - எகிறிய போலி அதிகாரியை சிறையில் அடைத்த போலீஸ் | Fraud tahsildar arrest by karur police

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (24/01/2019)

கடைசி தொடர்பு:11:25 (24/01/2019)

‘தாசில்தாரையே கைதுசெய்வீர்களா?’ - எகிறிய போலி அதிகாரியை சிறையில் அடைத்த போலீஸ்

'நான் மதுரை தாசில்தாராக்கும்...' என்று தமிழ்நாடு முழுக்க ஜம்பம் காட்டி,கல்லா கட்டிவந்த பழனிவேலு என்பவரை கரூர்,வேலாயுதம்பாளையம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

பழனிவேல்


கரூரை அடுத்த புன்னம்சத்திரம் ஓலப்பாளையம் அருகே, சாலை ஓரத்தில் பழைய அம்பாஸ்சிடர் கார்  ஒன்று, நேற்று இரவு அதிக நேரம் நின்றிருக்கிறது. அந்த கார் தமிழ்நாடு அரசு என்ற ஸ்டிக்கர் மற்றும் எம்பளத்துடன் நின்றுள்ளது. அந்த கார், நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றதைக் கண்ட போலீஸார், காரில் இருந்தவரிடம் விசாரித்துள்ளனர். காரில் இருந்த பழனிவேலு, தான் ஒரு தாசில்தார் எனக் கூறியுள்ளார். 

கார்

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். சந்தேகம் அடைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இவர் மதுரை தாசில்தார் எனக் கூறி ஏமாற்றிவந்தது தெரியவந்தது. அவருக்குச் சொந்த ஊர் மதுரை என்பதும் தெரிந்திருக்கிறது. ஆனால், 'என்னைக் கைதுசெஞ்சா என்ன ஆகும் தெரியுமா?. மதுரை கலெக்டரை விட்டு போன் செய்ய சொல்லட்டுமா?' என்று அந்தப் போலி தாசில்தார் ஆசாமி எகிறியுள்ளார். தங்களது வழக்கமான ட்ரீட்மென்டை போலீஸார் கொடுத்த பிறகே, கப்சிப் என்று அவர் அடங்கிப்போயிருக்கிறார். இதையடுத்து, அந்த காரை பறிமுதல் செய்ததோடு,போலி தாசில்தார் பழனிவேலுவை கைதுசெய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பழனிவேலுவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 
 

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

கைதுசெய்யபட்ட பழனிவேலுவிடமிருந்து போலி அடையாள அட்டை, தமிழக அரசு முத்திரையுடன்கூடிய ரப்பர் ஸ்டாம்புகள், அஞ்சலட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. நீண்ட நாள்களாக அரசு அதிகாரி, தனி தாசில்தார், மதுரை தாசில்தார் எனப் பலரை ஏமாற்றி, கரன்ஸிகளைக் கறந்து சுகபோகமாக சுற்றித்திரிந்த பழனிவேலு, இப்போது கரூர் பகுதியில் சிக்கியுள்ளார். 'பலநாள் நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற பழமொழி இந்தச் சம்பவத்தில் உண்மையாகியுள்ளது.

ரப்பர் ஸ்டாம்புகள்

போலீஸாரின் விசாரணையில், பழனிவேலு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தாசில்தாருக்கு தற்காலிக டிரைவராகக் கொஞ்ச காலம் பணியாற்றியதும், அதன்பிறகு தாசில்தாருக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்துவிட்டு, தானும் அதுபோல் தாசில்தார் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இப்படி தாசில்தாராக அவதாரம் எடுத்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார். இவர், தாசில்தார் என்கிற பதவிப் பெயரை பயன்படுத்தி என்னென்ன முறைகேடுகள் செய்தார், எங்கங்கே கைவரிசையைக் காட்டினார் என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் பழனிவேலுவை துருவித் துருவி விசாரித்துவருகிறார்கள்.