`கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுங்க!’ - ராஜ்பவன் முன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த தி.மு.க | DMK conduct protest for demanding Edappadi to resign his CM post in the issue of Kodanad

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (24/01/2019)

கடைசி தொடர்பு:11:50 (24/01/2019)

`கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுங்க!’ - ராஜ்பவன் முன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த தி.மு.க

'கொடநாடு விவகாரத்தில் முதல்வர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, தி.மு.க சார்பில் சென்னை ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

திமுக போராட்டம்

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள்குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், இந்தக் கொலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என குற்றம் சாட்டினார். தொடர்ந்து, சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார்.

திமுக போராட்டம்

இந்தக் கொலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எனவே, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திவருகிறார். இந்நிலையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க போராட்டம் நடத்திவருகிறது. மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம் ஆகியோர் தலைமையில் இந்தப்  போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் மு.க தமிழரசு உள்பட, பல தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். போராட்டத்தைக் கட்டுபடுத்த முடியாத காவல் துறையினர், தி.மு.க-வினரைக் கைதுசெய்துள்ளனர்.