'மாணவர்களுக்கு வெறும் படிப்பை மட்டும் வழங்காமல், அவர்களுக்கு விருப்பமான விழிப்பு உணர்வு விஷயங்களை வழங்கினால் படிப்பில் சலிப்பு ஏற்படாது' என தபால்தலை, நாணயங்கள் சேகரிப்பு ஆர்வலர் தெரிவித்தார்.
மதுரை தபால்தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்கமும், கே.எல்.என்.வித்யாலய பள்ளியின் கே.எல்.கிருஷ்ணன் தபால்தலை சேகரிப்போர் சங்கமும் இணைந்து நடத்திய தபால்தலை, நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள், கண்காட்சியின் மூலமாகப் பல வரலாறுகளை அறிந்துகொண்டனர்.
நிகழ்ச்சியைப் பள்ளியின் முதல்வர் ஜே.வேணி மற்றும் நிர்வாக அலுவலர் எஸ்.கே.ராஜபிரபு தொடங்கிவைத்தனர். மதுரை தபால்தலை நாணயங்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் எம்.சுவாமியப்பன் மற்றும் சங்கத்தின் பொருளாளர் மாதவன்,மூத்த உறுப்பினர்கள் செல்லவேல் , காதர் ஹுசைன் மற்றும் நம் சங்கத்தின் இளைய உறுப்பினர்கள் அன்பு சிதம்பரம், கண்ணம்மை ஆகியோரும் தங்களது சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சிவக்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் செய்திருந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் நம்மிடம் கூறுகையில்," தற்போதைய காலகட்டத்தில் கல்வி மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால், பெற்றோர்கள் போட்டிபோட்டு பள்ளிகளைத் தேர்வுசெய்து குழந்தைகளைப் படிக்கவைக்கின்றனர். வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், வெளி உலகத்தைக் கற்றுக்கொள்ளாமல் வாழ்க்கையில் திணறுகின்றனர். அப்படியான விசயங்களைத் தவிர்க்க, தபால் தலை சேகரிப்பு , பழங்கால நாணயங்கள் சேகரிப்பு என ஏதாவது ஒன்றில் ஆர்வப்படுத்திக்கொண்டு வரலாற்றைத் தேடினால், அவர்களுக்கு அறிவு மேம்படும். மேலும், கல்வியின் மீதுள்ள சலிப்புகள் குறைந்து புத்துணர்சியைத் தரும் என்றார்.