‘அற்புதம்மாளுக்கு துணை நில்லுங்கள்’ - எழுவர் விடுதலைக்காக நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் | Support to arputhammal's protest, says actor Sathyaraj

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:12:35 (24/01/2019)

‘அற்புதம்மாளுக்கு துணை நில்லுங்கள்’ - எழுவர் விடுதலைக்காக நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்

`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 28 வருடங்களாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு  முடிவெடுக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 பேர்  விடுதலை தொடர்பாகத்  தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், ஆளுநர் இதுவரை இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் உள்ளார்.  

ஏழு பேர்

ஏழு பேரை விடுதலைசெய்ய வேண்டும் என தமிழக மக்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பல தமிழர்களும் ஆளுநருக்குக் கடிதம் எழுதினர். மேலும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சைக்கிள் பேரணி போன்றவையும் நடத்தப்பட்டது.  இருந்தும், இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும், கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.அற்புதம்மாள்

தன் மகன் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, தன் மகன் உள்பட ஏழு பேரின் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்க உள்ளார். இந்தப் பயணம், இன்று மாலை கோவையில் தொடங்குகிறது. 

சத்யராஜ்

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சத்யராஜ், “ பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன்  இந்த ஏழு பேரும், 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளார் அற்புதம்மாள். இதில், அவருக்கு நாம் துணை நின்று, எழுவர் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.