குப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள்  - 'ஆசைப்பட்டதால் அவதிப்படுகிறேன்' என வாக்குமூலம் | Chennai man keeps Demonetisation Currency at home ; police arrested him

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (24/01/2019)

கடைசி தொடர்பு:15:05 (24/01/2019)

குப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள்  - 'ஆசைப்பட்டதால் அவதிப்படுகிறேன்' என வாக்குமூலம்

சென்னை ஓட்டேரியில், குப்பை பொறுக்குபவர் வீட்டில் லட்சக்கணக்கான செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பது போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச் சென்ற போலீஸார், அவற்றைப் பறிமுதல்செய்தனர். 

குப்பை பொறுக்கும் அந்தோணி

 

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த குப்பை பொறுக்கும் ஒருவரின் வீட்டில், செல்லாத ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதாக தலைமைச்செயலக காலனி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீஸார் பிரபு, வினோத் ஜான், சத்யா ஆகியோர் கொண்ட போலீஸ் டீம், ஓட்டேரி பாலம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் போலீஸைப் பார்த்ததும் தப்பி ஓடினார். உடனடியாக போலீஸ் டீம் அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தபோது, அவரிடம் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல் தெரியவந்தது. 

 இதுகுறித்து  போலீஸார் கூறுகையில், ``எங்களிடம் சிக்கியவரின் பெயர் அந்தோணி (44). சென்னை ஓட்டேரி, எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர். இவர், குப்பை பொறுக்கும் தொழில் செய்துவருகிறார். சில மாதங்களுக்கு முன், இவர் சேத்துப்பட்டு, பாலத்தின் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் குப்பையை கிளறியுள்ளார். அப்போது, ஒரு பையில் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. அதைப் பார்த்ததும் அதிர்ஷடம் அடித்துவிட்டது எனக் கருதிய அந்தோணியின் முகம் ஆயிரம் வால்ட்ஸ் பல்ப்பின் வெளிச்சம்போல பிரகாசமடைந்துள்ளது.  அந்த ரூபாய் நோட்டுகளை வீட்டுக்கு எடுத்துச்சென்ற அந்தோணி, அவற்றை எண்ணிப்பார்த்துள்ளார். 1000 ரூபாய் நோட்டுக்கள் 964-ம், 500 ரூபாய் நோட்டுக்கள் 800-ம் இருந்துள்ளன. அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று அந்தோணி ரகசியமாக முயன்றுள்ளார். இதற்காக, சிலரின் உதவிகளை அவர் நாடியுள்ளார். அவர், உதவி கேட்ட நபரில் ஒருவர்தான் எங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். 

 குப்பை பொறுக்குபவர் அந்தோணிக்கு கிடைத்த ரூபாய் நோட்டுக்கள்

அந்தோணியைக் கையும் களவுமாகப் பிடிக்க நாங்கள் திட்டமிட்டோம். சம்பவத்தன்று, வீட்டிலிருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு வந்த அந்தோணியை ஓட்டேரி பாலம் பகுதியில் வைத்து மடக்கத் திட்டமிட்டோம். எங்களைப் பார்த்ததும், அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால், எங்களிடம் அவர் சிக்கிக்கொண்டார். அவரிடமிருந்து செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம். அவற்றின் மதிப்பு 13,64,000 ரூபாய். பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, அதை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால், அந்தோணி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்துள்ளோம். அவரிடமிருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை நீதிமன்றத்தின்மூலம் ஆர்பிஐ-யிடம் கொடுக்க முடிவுசெய்துள்ளோம்" என்றார். 

 2016, நவம்பர் மாதத்தில்  பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றவும் காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்தவர்கள், தங்களிடமிருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்தனர். பதுக்கிவைக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை அவர்கள் யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டிகளிலும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீசிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோல சேத்துப்பட்டு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் போடப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள்தான் அந்தோணி கையில் கிடைத்துள்ளது. அவரிடம், அந்த ரூபாய் நோட்டுகள் கிடைத்தவுடன், போலீஸ் அல்லது ஆர்பிஐ-க்கு அவர் தகவல் தெரிவித்திருத்திருக்கலாம். ஆனால், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி, வசதியாக வாழலாம் என்ற ஆசையால் அந்தோணி தற்போது சிக்கிக்கொண்டார். அந்தோணி கையில் கிடைத்த செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து போலீஸாரும் ஆர்பிஐ அதிகாரிகளும் ரகசிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

 செல்லாத ரூபாய் நோட்டுகள், லட்சக்கணக்கில் சென்னையில் குப்பை பொறுக்குபவரிடம் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளின் உரிமையாளர் யார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.