கொடநாடு மர்மங்கள் - சயான் ஜாமீனை ரத்துசெய்ய தீவிரம் காட்டுகிறதா அரசு? | A ooty court refuses to cancel the bail of Manoj and Sayan

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (24/01/2019)

கடைசி தொடர்பு:13:35 (24/01/2019)

கொடநாடு மர்மங்கள் - சயான் ஜாமீனை ரத்துசெய்ய தீவிரம் காட்டுகிறதா அரசு?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்ய கால அவகாசம் அளிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோடநாடு

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில்,  கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில்,  காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். பிப்ரவரி மாதம் 2-ம் தேதி, வழக்கின் விசாரணை நடக்க உள்ளது.
 

வழக்கறிஞர்

இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ், பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கொடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்புள்ளதாகத் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை மறுத்த முதல்வர் பழனிசாமி, குற்றம் சாட்டியவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டெல்லியில் இருந்து சயான் மற்றும் மனோஜ் கைதுசெய்யப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி ஜாமீனில் விடுவித்தனர். சாமுவேலை கைதுசெய்ய தமிழக காவல் துறையினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய, அரசு சார்பில் கடந்த 18-ம் தேதி வழக்கறிஞர் பாலநந்தகுமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இன்று சயான் மற்றும்  மனோஜ் ஆகிய இருவரும் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் இன்று ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 29-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க