`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் | Veda Home was Freezing in 2007 Income Tax reply to the High Court

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (24/01/2019)

கடைசி தொடர்பு:13:41 (24/01/2019)

`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் இருந்த சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவுள்ளதாக 2017-ம் ஆண்டு அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வேதா இல்லமும் அடங்கும். அதற்காக அந்த வீடு முடக்கப்பட்டிருக்கும் போது அதை நினைவு இல்லமாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என ட்ராஃபிக் ராமசாமி தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அனைத்து விதிகளுக்கும் உட்பட்டுத்தான் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவுள்ளோம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித் துறையினர் விளக்கமளிக்க வேண்டும் என முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன் படி இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், `சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக 2007-ம் ஆண்டே போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத்தில் உள்ள வீடு, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.16.75 கோடியைச் செலுத்திவிட்டு அந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றிக்கொள்ளலாம் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், `நினைவு இல்லமாக மாற்றும் போது அரசு தரப்பிலிருந்து ஒரு தொகை வழங்கப்படும்’ எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் `நினைவு இல்லமாக மாற்ற இதுவரை எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கேட்டனர். `நினைவு இல்லம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது’ என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். அப்போது, `பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்னைகளை முடிக்காமல் எப்படி மக்களிடம் கருத்து கேட்கலாம் எனக் கூறிவிட்டு இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.