`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க?’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள் | 'Remove the teachers; Give young people a job! '- villagers rallied against teachers protest

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (24/01/2019)

கடைசி தொடர்பு:14:15 (24/01/2019)

`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க?’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்

`40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களே, இது உங்களுக்கே நியமாக இருக்கிறதா. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீக்குங்கள். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்களைப் பணியில் அமர்த்துங்கள்' என்று ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                  

 
தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் போராட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாவட்டத்திலுள்ள 80 சதவிகித அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது 

                                            

 

இதைக் கண்டித்து, அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர், பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டு, ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பளம் போதவில்லை எனக் கூறும் ஆசிரியர்கள், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைக்குச் செல்லட்டும். அதிக சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைவிட, குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த கல்வியை அளிக்கின்றனர்' என்று கோஷங்களைப் போட்டனர். 

                                            


போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனிடம் பேசினோம். ``அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பார்க்கும்போது கோபமும் ஆத்திரமும் தான் வருகிறது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் போதவில்லை என்று போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.

                                                

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு ஆசிரியராவது, எங்கள் பள்ளியில் இந்த வசதிகள் போதவில்லை; அரசு உடனே செய்துகொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதுண்டா. தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு சிறப்பாகப் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் கொடுமைதான் உங்களுக்கு நன்றாகவே தெரியுமே. இந்த நிலையை மனதில் வைத்துக்கொண்டுதான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீக்கிவிட்டு ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகிறோம்’’ என்று முடித்தார்.