`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி!'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி | Man commits suicide due to bank pressure to repay loan in Tiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (24/01/2019)

கடைசி தொடர்பு:15:25 (24/01/2019)

`கெஞ்சியும், மிரட்டிக்கிட்டே இருந்தது வங்கி!'- உயிரை மாய்த்த கணவர்; கண்ணீர்விடும் மனைவி

நாகையில் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனால் கணவனை இழந்த மனைவி கண்ணீரோடு காவல் நிலையத்தில் வங்கியின் மீது புகார் கொடுத்தார். 

வீரமணி

நாகை மாவட்டம் சூரமங்களம் பகுதியில் வசிப்பவர் ராதிகா. இவர் திருவாரூர் அடுத்த வாழவாய்க்கால் பகுதியில் செயல்படும் கிராம விடியல் சுய உதவிக்குழு மூலமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கியில் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 8 வாரங்களாக வங்கித் தவணையைச் செலுத்தவில்லை. தனியார் வங்கி அதிகாரிகள் இன்று காலை ராதிகாவின் வீட்டுக்கு வந்து மிரட்டியதால் மனமுடைந்த ராதிகாவின் கணவர் வீரமணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ராதிகா காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார்.

ராதிகா

``எங்களால் முடிந்தவரை நாங்கள் கடனை அடைத்துக்கொண்டுதான் இருந்தோம். இயற்கையும் எங்களைப்போன்ற ஏழைகளையே சோதிக்கவும் செய்கிறது. கஜா புயலால் அனைத்தையும் இழந்துவிட்டோம். அதிலிருந்து மீள்வதே பெரும் பாடாக இருக்கின்ற நிலையில் இவர்களும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். எத்தனையோ முறை கூறி இருப்போம் கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள் நாங்கள் ஏமாற்றி விடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிக் கெஞ்சியிருக்கிறோம். ஆனால், அவர்கள் எங்கள் நிலையைப் புரிந்து கொள்ளவே இல்லை. மேலும் மேலும் எங்களை தொந்தரவு செய்தார்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே இந்தப் பிரச்னை பற்றி கூறியிருந்தோம். அவர்களும் ஆறுமாதகாலம் காலநீட்டிப்பு செய்யச் சொல்லி வங்கிகளுக்கு உத்தரவிட்டார். அப்படி இருந்தும் இன்று காலை வங்கியிலிருந்து வந்தவர்கள் வன்முறை செய்தனர். தகாக வார்த்தைகளைப் பயன்படுத்தினர். நாங்கள் ஏழை மானம் மட்டுமே எங்களின் உடமை அதுவும் இன்று பறிபோனது. இதனால் இன்றைக்கு என் கணவரை நானும் என் குடும்பமும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறோம். நான் எப்படியேனும் கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன் என் கணவரை அவர்கள் திருப்பித் தருவார்களா’’ என்று கதறி அழுதார் ராதிகா.

மேலும் பேசிய அவர் ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுய உதவி கடன்களைத் திரும்பச் செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை மீறிய அந்த வங்கி மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கண்ணீருக்கும் இழப்புக்கும் அரசுதான் பதில் சொல்ல வேண்டும் என் போன்ற பெண்மணிகள் இப்படிக் கணவனை இழந்து தவிக்கும் நிலையை ஒழியுங்கள். எனது வாழ்க்கை போயிற்று இனி என்போன்று யாரும் கண்ணீர் விடக்கூடாது’’ என்றார்.