கோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா! - அலைமோதிய பக்தர்கள் கூட்டம் | konankuppam church festival 2019

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (24/01/2019)

கடைசி தொடர்பு:15:55 (24/01/2019)

கோணாங்குப்பம் மாதா திருத்தலத்தில் தேர் திருவிழா! - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்திபெற்ற பெரியநாயகி மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் வீரமாமுனிவரால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தைக் கட்டும்போதுதான் வீரமாமுனிவர் இங்கு தங்கி தேம்பாவனி நூலை எழுதியுள்ளார். 

 தேர்

முகாசபரூர் பாளையகாரர்கள் இடம் கொடுத்து அமைக்கப்பட்ட  இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஜனவரி 14-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினம் கூட்டுத் திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வந்தது. பத்தாம் நாள் திருவிழாவாகத் தேர் திருவிழா நேற்று இரவு நடந்தது. 

முகாசபரூர் பாளையகாரர் பாலதண்டாயுதம் அவரது வீட்டிலிருந்து தேவாலய மரியாதையுடன் குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக  அழைத்து வரப்பட்டு, தேரை அவர் துவக்கிவைக்க  பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மின் விளக்கு அலங்காரத்துடன் தேர் பவனி வந்தது பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. 

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து  பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த திருவிழாவில் விருத்தாசலம் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மட்டுமில்லாமல்  தமிழகத்தின் சென்னை, திருச்சி, வேளாங்கண்ணி, 
நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம், பெங்களூர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோணான்குப்பம் கிராமத்துக்கு சென்னை, விழுப்புரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளிலிருந்து 
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.