`மோடியும் அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்! | thirunavukarasar slams bjp and admk

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:17 (24/01/2019)

`மோடியும் அமித் ஷாவும் அலறுகிறார்கள்' - பிரியங்கா காந்தி குறித்து திருநாவுக்கரசர்!

முதல்வரிடம் உள்ள காவல்துறையை வேறொருவருக்கு ஒதுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநாவுக்கரசர்

மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், முன்னாள் நீதியரசர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தற்போதுள்ள அரசாங்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாகச் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதையும், வழக்கு போடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்துச் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேச வேண்டும். கொடநாடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இதில் முதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும், அல்லது முதல்வரிடம் உள்ள காவல்துறையை வேறொருவருக்கு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சியால் பாதிப்படைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி உரிய தொகையை வழங்க வேண்டும். அதேபோல் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார்.  

பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை குறித்து?

பிரியங்காவின் நியமனத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கிறது. பிரியங்கா பார்ப்பதற்கு அச்சு அசலாக இந்திரா காந்தி போல் உள்ளதால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனத் தொண்டர்கள் ஆசைப்பட்டனர். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு ராகுல் காந்தி பதவி அளித்திருப்பது வரவேற்புக்குரியது. பிரியங்கா ஒன்றும் அரசியலுக்கு புதியவர் இல்லை. பரம்பரையான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து சிறுவயது முதலே மக்கள் தொண்டில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி, சோனியா காந்தி வெற்றிக்கு ஏற்கெனவே உழைத்தவர். சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கப்பட்டு பிரியங்கா களத்தில் இறங்குகிறார். அவரின் சிறப்பான பணி நிச்சயமாகக் காங்கிரஸ் கட்சிக்கு உதவும். அவரின் வருகை பா.ஜ.க-வுக்கு அச்சத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மோடியும், அமித் ஷாவும் பிரியங்கா வருகையைக் கண்டு அலறுகிறார்கள். பா.ஜ.கவுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகிறார்கள். 

பிரியங்கா காந்தி

நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளாரே?

பா.ஜ.க-விலும் வாரிசுகள் எத்தனையோ பேர் உள்ளனர். பியூஷ் கோயல் உள்ளிட்ட பல பேர் பா.ஜ.க-வில் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தகுதியும், திறமையும் இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். நிர்மலா சீதாராமன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றாரா என்ன. இல்லை பா.ஜ.க-வுக்காக சிறை சென்றாரா. அவர் அரசியலுக்கு வரும்போது பிரியங்கா காந்தி வரக்கூடாதா.

பிரியங்கா காந்தி வருகை வரக்கூடிய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

பிரியங்கா வருவதற்கு முன்பாகவே பா.ஜ.க-வுக்கு பின்னடைவு வந்துவிட்டது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலிலேயே அவர்கள் பின்னடைவைச் சந்தித்துவிட்டார்கள். வரும் தேர்தலில் பா.ஜ.க வீழ்ச்சியைச் சந்திக்கும். இது உறுதி. இதற்கு ராகுல் காந்தியுடன் சேர்ந்து பிரியங்காவும் உதவுவார்.

திருநாவுக்கரசர்

திருச்சி கூட்டத்தில் பங்கேற்றவர்களைக் குண்டு வைக்கும் கும்பல் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்?

நேற்று பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்கள். அவர்களை எல்லாம் வெடிகுண்டு கலாசாரத்தைக் கொண்டவர்கள் என்று சொன்னால், மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள ஹெச்.ராஜா என்ன காந்தியின் வாரிசா. இதுமாதிரியான விமர்சனங்களை ஹெச்.ராஜா நிறுத்திக்கொள்ள வேண்டும். எப்போதும் எல்லை மீறிய விமர்சனத்தைத் தெரிவித்து மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் ராஜா. இது அவருக்கு வழக்கமாகி விட்டது. அவரைப் பா.ஜ.க திருத்துவதாகத் தெரியவில்லை. அவரும் திருந்துவதாக தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க