`2 நாளில் ரூ.3,00,431 கோடி முதலீடு’ - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்` | 3,00,431 crore investment in global investors meet says Tamilnadu CM

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:20 (24/01/2019)

`2 நாளில் ரூ.3,00,431 கோடி முதலீடு’ - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்`

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். இம்மாநாட்டில், பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட தொழில் பொருட்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து விண்வெளி, ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை, வேலைவாய்ப்பு தொடர்பாக முதலீட்டாளர்கள் பங்குபெற்ற கருத்தரங்குகள் நடந்தன.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

மாநாட்டின் இறுதி நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். அவர் கூறும்போது, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2023-ம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில்தான் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று அது மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், தொழில்துறை கூடுதல் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்த மாநாட்டுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்து அவர்களை ஈர்க்கக் கடுமையாகப் பாடுபட்டனர். அதன் காரணமாக இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3,00,431 கோடி ரூபாய்க்குத் தொழில் முதலீடுகளும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் அதானி நிறுவனம் ரூ.10,000 கோடி மதிப்பில் தொழிற்சாலை அமைக்கவுள்ளது. எய்ச்சர் மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. மேலும், என்.எல்.சி நிறுவனத்துடன் ரூ.23,800 கோடியும், சி.பி.சி.எல் நிறுவனத்துடன் ரூ.27,400 கோடியும், ஏசர் நிறுவனத்துடன் ரூ.1,500 கோடியும் எம்.ஆர்.எஃப் நிறுவனத்துடன் ரூ.3,100 கோடியும் ஹூண்டாய் நிறுவனத்துடன் ரூ.7,000 கோடியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. டி.வி.எஸ் மற்றும் எம்.ஆர்.எஃப் நிறுவனங்கள் கூடுதல் முதலீடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளனர். வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பெரும் முதலீட்டைத் தமிழகம் ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு நாள்களாக நடந்த இந்த மாநாட்டுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி”  எனத் தெரிவித்துள்ளார்.