``15 ஆண்டுகளா கொத்தடிமையா இருக்கோம்!" - செங்கல் சூளையில் இருந்து தப்பித்து வந்த இளைஞர் குமுறல் | I will kill your entire family, threatens Brick Kiln owner

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (24/01/2019)

கடைசி தொடர்பு:19:15 (24/01/2019)

``15 ஆண்டுகளா கொத்தடிமையா இருக்கோம்!" - செங்கல் சூளையில் இருந்து தப்பித்து வந்த இளைஞர் குமுறல்

             

 ஆர்.டி.ஓவிடம் புகார் அளித்த காமராஜ்

``ஒரு செங்கல் சூளையில் எங்க குடும்பத்தையே அடைச்சு வச்சு கொடுமைப்படுத்துறாங்க. உடம்புக்கு முடியாத எங்கப்பாவுக்கு வைத்தியம் பார்க்கவிடாமல், சித்ரவதை பண்ணுறாங்க. எங்க குடும்பத்தைக் காப்பாத்துங்க" என்று கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணீரோடு இளைஞர் ஒருவர் புகார் கொடுக்க, பரபரப்பு ஏற்பட்டது.


 ஆர்.டி.ஓவிடம் புகார் அளித்த காமராஜ்..

கரூர் மாவட்டம், நெரூர் அருகே உள்ள முனியப்பனூர் என்ற இடத்தில் எஸ்.வி.எஸ் செந்தில்வேலன் சேம்பர் என்ற பெயரில் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராஜசேகர். இந்தச் சூளையில் கடந்த 15 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் அவரின் மனைவி, இரு மகன்கள் காமராஜ், விஜி ஆகிய நால்வரையும் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

செங்கல் சூளையை விட்டு வெளியே செல்லமுடியாமல் குறைந்தபட்ச ஊதியமாக நான்கு நபர்களுக்கும் சேர்த்து வாரம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே சேகர் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையானபோது கூட, சொந்த ஊருக்கு அனுப்பி சிகிச்சை அளிக்காமல் செங்கல் சூளை உரிமையாளர் செங்கல் சூளையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை எப்படியோ அறிந்த தலித் விடுதலை இயக்கம், அரசு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தது. கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இரவு 7 மணிக்கு செங்கல்சூளையை ஆய்வு செய்தனர். அங்கு கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சேகர் குடும்பத்தாரிடம் காலையில் வந்து மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், இன்று காலை செங்கல் சூளைக்கு வந்த செங்கல் சூளை உரிமையாளர் ராஜசேகர், சேகரின் மனைவி மற்றும் இரு மகன்களை தாக்கியதோடு, அவர்களை வேறொரு இடத்துக்கு கடத்திச் செல்ல முயன்றுள்ளார். 'புகாரா கொடுக்கிறீங்க. மொத்தக் குடும்பத்தையும் சூளையில் தள்ளி எரிச்சு சாம்பலாக்கிவிடுவேன்' என்று மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில், அவரிடமிருந்து தப்பித்த சேகரின் மூத்த மகன் காமராஜ், நேராக கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தன் குடும்பத்தை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ்,
காமராஜ்``கடந்த 15 ஆண்டுகளாக நான்கு பேருக்கும் வாரம் ஒன்றுக்கு ஆயிரம் மட்டுமே ஊதியமாக அளித்து எங்களை செங்கல் சூளையை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைத்து வைத்திருந்தனர். என் பாட்டியின் மறைவுக்குக்கூட வெளியூர் செல்ல விடாமல் தடுத்தனர். என் தந்தை சேகருக்கு சூளையில் வேலை பார்க்கும்போது விபத்து ஏற்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தபோதும், மருத்துவ சிகிச்சைக்குக்கூட வெளியே அனுப்பாமல் செங்கல் சூளையில் அடைத்து வைத்திருந்தனர். நேற்று உறவினர் ஒருவருக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்திருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை முதலாளி, என்னையும், என் குடும்பத்தையும் தாக்கி வலுக்கட்டாயமாக வேறொரு இடத்துக்கு கடத்திச் செல்ல முயன்றார். அவரிடமிருந்து தப்பித்து புகாரளிக்க வந்துள்ளேன். செங்கல் சூளையில் மாட்டி முழிக்கும் என் குடும்பத்தை மீட்க வலியுறுத்திதான் புகார் கொடுத்துள்ளேன்" என்றார் நடுங்கிக் கொண்டே!