அல்லிநகரம் ஜல்லிக்கட்டு விவகாரம்! - தேனி கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்! | High Court Madurai Branch issues Notice to theni collector

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (24/01/2019)

அல்லிநகரம் ஜல்லிக்கட்டு விவகாரம்! - தேனி கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசிதழில் வெளியிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் வீரப்ப ஐயனார் ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் சந்தானகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “வருடா வருடம் எங்கள் வீரப்ப ஐயனார் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் நிலவியது. தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு எனச் சிறப்புச் சட்டம் இயற்றியுள்ளது. இதன் அடிப்படையில், அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, சுக்குவாடன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் தேனி வட்டார மாடு பிடிப்போர் மற்றும் வளர்ப்போர் ஒன்றுகூடி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.

எனவே, அல்லிநகரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களின் அரசிதழில் வெளியிடக் கோரி தேனி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தோம். இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அரசிதழில் அல்லிநகரம் இடம் பெறவில்லை. எனவே, அல்லிநகரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கவும், எங்கள் ஊரின் பெயரை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு, இன்று நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்துத் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.