துவம்சம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள்! காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அதிரடி! | District administration demolishes encroached shops in kanchipuram bus stand

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:15 (24/01/2019)

துவம்சம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள்! காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அதிரடி!

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து விதிகளை மீறிக் கட்டப்பட்ட கடைகளைக் காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் சரவணன் இன்று அதிரடியாக அகற்றினார். நீண்ட வருடங்களாக ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கடைகள் அகற்றப்பட்டதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு அகற்றம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் சுமார் 100 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை நடத்தி வருபவர்கள் நடைபாதையை ஆக்கிரமிப்புசெய்து தங்கள் கடைகளை விரிவுபடுத்திக்கொண்டனர். உணவகம், குளிர்பானக் கடைகள், பூக்கடைகள் என நடைபாதையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்துவந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சில கடைக்காரர்கள் தங்கள் கடைக்கு எதிரிலேயே சிறிய கடைகளை அமைத்துக்கொள்ள மற்றவர்களுக்கு அனுமதி தந்து அதற்காக வாடகைத் தொகையையும் வசூலித்து வந்தார்கள்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு அகற்றம்

கடந்த மாதம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டிருந்தார். ஒருமாதமாகியும் கடைக்காரர்கள் அந்தக் கடைகளை அகற்றாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சார்-ஆட்சியர் சரவணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்களிடமும் காவல்துறையினரிடமும் கடை உரிமையாளர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு அகற்றம்

இதன் காரணமாகப் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம் நகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள  கடைக்காரர்கள் ஒழுங்காக வரி செலுத்தாததால், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு நகராட்சிக்கு வாடகை பாக்கி இருக்கிறது.   இதுவும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க