`பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது; அச்சம் வேண்டாம்!' - சுகாதாரத்துறைச் செயலர் | Health Department steps up for preventing swine flu

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:45 (24/01/2019)

`பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது; அச்சம் வேண்டாம்!' - சுகாதாரத்துறைச் செயலர்

தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒருவர்கூட பன்றிக் காய்ச்சல் காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

மிழகத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கச் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல்

கடந்த 2 வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,694 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இதனால், பொதுமக்களிடம் பன்றிக் காய்ச்சல் தொற்று குறித்த அச்சம் அதிகரித்திருக்கிறது. இதன் பாதிப்பில் தமிழகத்தில் நிலை குறித்தும், மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் அதிகமாகப் பரவக்கூடிய காலமாகும். அப்போது தமிழக சுகாதாரத் துறை எடுத்த தீவிர நடவடிக்கையால் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜனவரியில் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 1,036 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதே காலகட்டத்தில் தமிழகத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அதிகம் பேர் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டவர்கள். எனவே, தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் இதுதான் சவாலாக இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் அனைவரும் உரிய சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒருவர்கூட பன்றிக் காய்ச்சல் காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்படத்  தேவையில்லை. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை ஆலோசித்துத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால், எளிதில் குணமடையலாம். உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம். இதுகுறித்து 044-24350 496, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற ஆலோசனை பெறலாம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க