18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு அவகாசம் நாளையுடன் முடிகிறது! | appeal for 18 mla case will end on January 25

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (24/01/2019)

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு அவகாசம் நாளையுடன் முடிகிறது!

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் நாளை ஜனவரி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பதவியிழந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எவரும் இதுவரையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆகஸ்ட் 22, 2017-ல் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்து மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நோட்டீஸ் பாய்ந்தது. கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி பக்கம் தாவிவிட, மீதியிருந்த 18 எம்.எல்.ஏ-க்களும் சபாநாயகர் தனபாலால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 

சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் 18 பேர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி துரைசாமி, கே.ரவிச்சந்திரபாபு, இந்திரா பானர்ஜி, சுந்தர் அமர்வு என உருண்ட இவ்வழக்கில், கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை இந்திரா பானர்ஜி அமர்வு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, வழக்கு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணாவுக்கு மாற்றப்பட்டது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில், அக்டோபர் 25-ம் தேதி சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பால், 18 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவியை இழந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் மூன்று மாதத்துக்கு வழங்கப்பட்டது. அந்த அவகாசம் நாளையுடன் (ஜனவரி 25-ம் தேதி) முடிவடைகிறது. இதுவரையில், 18 எம்.எல்.ஏ-க்களின் சார்பில் யாரும் மேல்முறையீடு செல்லவில்லை. தினகரன் பக்கமிருந்து தி.மு.க.வுக்குத் தாவியுள்ள செந்தில்பாலாஜியும் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான சட்டபூர்வ தடை ஏதுமில்லை.